முன்னாள் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள், தனது அரசியல் பயணத்தை மீண்டும் தீவிரப்படுத்தும் வகையில் அதிமுகவில் இணைந்துள்ளார். சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி K.பழனிச்சாமியை நேரில் சந்தித்து அவர் அதிமுகவில் அதிகாரப்பூர்வமாக உறுப்பினரானார்.
கட்சியில் இணைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த காளியம்மாள், அதிமுகவில் ஜனநாயகமான சூழல் இருப்பதால் தான் இந்த முடிவை எடுத்தேன். சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்களுக்கும் இக்கட்சியில் உயர வாய்ப்பு உள்ளது. இக்கட்சியின் தலைமையே அதற்குச் சான்று என்று கூறினார். மேலும், தன்னை ஈர்த்த முக்கிய காரணம் கட்சியின் தற்போதைய தலைமையின் எளிமை மற்றும் அணுகுமுறை என்றும் விளக்கமளித்தார்.
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய பிறகு ஒரு ஆண்டுக்கும் மேலாக அமைதியாக இருந்தது குறித்து கேட்கப்பட்டபோது, அரசியலில் இருந்து நான் விலகவில்லை, மக்கள் பிரச்சனைகளில் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டே இருந்தேன். குடும்பத்துடன் சிறிது நேரம் செலவிடவும், எனக்குத் தேவையான ஓய்வை எடுக்கவும் தான் அந்த இடைவெளி தேவைப்பட்டது என்றார்.
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, எங்களுக்கான அரசியல் பங்கேற்பை கேட்டுள்ளோம். அதற்கான வாய்ப்பை வழங்குவதாக கூறியுள்ளனர் என பதிலளித்தார். இதனால் வரவிருக்கும் தேர்தலில் காளியம்மாளுக்கு அதிமுகவில் முக்கிய பொறுப்போ அல்லது தொகுதி வாய்ப்போ வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில், நாம் தமிழர் கட்சியில் பெண்கள் அமைப்பில் செயல்பட்ட ஒருவரின் இந்த மாற்றம், இரு கட்சிகளின் ஆதரவாளர்களிடையிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பெண்கள் அரசியலில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் குறித்த காளியம்மாளின் கருத்து தற்போது கவனம் பெறுகிறது.


