மத்திய கிழக்கில் அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் இன்று (மார்ச் 18, 2026) புதிய உச்சத்தை எட்டியுள்ளது. உலகளாவிய எண்ணெய் விநியோகத்தின் முக்கியப் பாதையான ஹார்முஸ் நீரிணையை ஈரான் முடக்கி வைத்துள்ள நிலையில், அதனைத் தகர்க்கும் நோக்கில் அமெரிக்க ராணுவம் தற்போது நேரடியாகக் களமிறங்கியுள்ளது. அமெரிக்காவின் மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, ஈரானின் கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள மிக ரகசியமான மற்றும் பலப்படுத்தப்பட்ட ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்க விமானப்படை இன்று அதிகாலை ஒரு பயங்கரமானத் தாக்குதலை நடத்தியது.
இந்தத் தாக்குதலில், பூமியின் ஆழத்தில் உள்ள பதுங்கு குழிகளையும் துளைத்துச் சென்று அழிக்கும் திறன் கொண்ட 5,000 பவுண்ட் (சுமார் 2,267 கிலோ) எடையுள்ள ‘பங்கர் பஸ்டர்’ (Bunker Buster) ரகக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் துல்லியமானத் தாக்குதல்கள் மூலம், சர்வதேசக் கப்பல் போக்குவரத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கிய ஈரானின் அதிநவீன ‘கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள்’ (Anti-ship Cruise Missiles) மற்றும் அவற்றின் ஏவுதளங்கள் முற்றிலுமாகத் தகர்க்கப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் ஒரு நாளைக்கு 2 கோடி பேரல் கச்சா எண்ணெய் விநியோகத்தை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல் ஈரானின் பாதுகாப்பு அரணுக்கு ஒரு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ள போதிலும், இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மற்றும் அண்டை நாடுகள் மீது ஈரான் மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் வளைகுடா பிராந்தியமே போர் மேகங்களால் சூழப்பட்டு, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் எகிறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


