ஈரானியர்களின் பாரம்பரியப் புத்தாண்டான ‘நவ்ரூஸ்’ (Nowruz) வரும் வெள்ளிக்கிழமை தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன்னதாகக் கொண்டாடப்படும் ‘சஹர்ஷான்பே சூரி’ (Chaharshanbe Suri) எனப்படும் நெருப்புத் திருவிழாவை ஈரான் மக்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். போரின் பாதிப்புகள் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், தீயவை அழிந்து நன்மை பிறக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் மக்கள் வீதிகளில் நெருப்பு மூட்டித் தாண்டி மகிழ்ந்தனர்.
இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரான் மக்களுக்கு ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டுள்ளார். அதில், “ஈரானின் தைரியமான மக்களே, உங்களது வசந்த காலத்தையும், ஒளித் திருவிழாவையும் நீங்கள் கொண்டாடுங்கள். ஆனால் ஒன்று நினைவிருக்கட்டும், நாங்கள் உங்களை மேலிருந்து (விமானம் மூலம்) உன்னிப்பாகக் கண்காணித்துக் கொண்டிருப்போம்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த எச்சரிக்கைக்குப் பின்னணியில் ஒரு முக்கியமான ராணுவ நடவடிக்கை ஒளிந்துள்ளதாகப் பார்க்கப்படுகிறது. கடந்த 24 மணிநேரத்தில் ஈரானின் இரண்டு முக்கியத் தளபதிகளை இஸ்ரேல் விமானப்படை அழித்துள்ளதாகத் தெரிவித்த நெதன்யாகு, “ஈரானிய மக்கள் அமைதியாகப் பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்பதற்காகவே, அங்கிருக்கும் பயங்கரவாதக் குழுக்களை நாங்கள் வேட்டையாடி வருகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, அண்மையில் ஈரானின் முக்கியத் தலைவரான அலி லாரிஜானி கொல்லப்பட்டதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டிய அவர், ஈரானிய மக்கள் தங்களது விடுதலையை நோக்கி நகர இதுவே சரியான தருணம் என்றும் வலியுறுத்தியுள்ளார். இஸ்ரேல் விமானங்கள் ஈரானின் முக்கியச் சதுக்கங்கள் மற்றும் சாலைகளில் இருக்கும் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி வரும் நிலையில், நெதன்யாகுவின் இந்த “மேலிருந்து கண்காணிப்போம்” என்ற வாசகம் ஈரான் ஆட்சியாளர்களுக்கு விடப்பட்ட நேரடி மிரட்டலாகவே கருதப்படுகிறது. ஒரு பக்கம் பண்டிகை கால உற்சாகமும், மறுபக்கம் போர் மேகங்களும் சூழ்ந்துள்ளதால் ஈரான் தேசம் தற்போது ஒரு இக்கட்டான சூழலில் உள்ளது.


