மத்திய கிழக்கில் இஸ்ரேல் விமானப்படை ஈரானின் மிக முக்கியமான எரிவாயு வயல்கள் (Gas Fields) மற்றும் எரிசக்தி மையங்கள் மீது நடத்திய அதிரடித் தாக்குதல், உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தத் தாக்குதல் அமெரிக்காவின் நேரடி உதவியுடன் நடத்தப்பட்டதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதனைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார். “ஈரானின் எரிசக்தி கட்டமைப்புகள் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கும், அமெரிக்காவிற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. இது இஸ்ரேலின் தற்காப்பு நடவடிக்கையாக இருக்கலாம், ஆனால் இதில் அமெரிக்கப் படைகள் பங்கேற்கவில்லை” என டிரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதனிடையே, இஸ்ரேலின் இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக, அமெரிக்காவின் நட்பு நாடான கத்தார் (Qatar) மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடுத்துள்ளது. இதனை “நியாயமற்ற செயல்” எனக் கடுமையாகச் சாடியுள்ள டிரம்ப், “இஸ்ரேல் செய்யும் காரியத்திற்கு கத்தார் மீதோ அல்லது பிற நட்பு நாடுகள் மீதோ தாக்குதல் நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது. கத்தார் மீதான தாக்குதலை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும், இல்லையெனில் அமெரிக்கா தனது அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்க நேரிடும்” எனப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹார்முஸ் நீரிணை முடக்கத்தால் ஏற்கனவே உலகப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கத்தார் போன்ற முக்கிய எரிவாயு உற்பத்தி நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்துவது சர்வதேச அளவில் எரிசக்தி தட்டுப்பாட்டை இன்னும் தீவிரமாக்கும் என அஞ்சப்படுகிறது. ஈரானின் இந்த ஆக்ரோஷமான நடவடிக்கைகளுக்குப் பதிலடி கொடுக்க அமெரிக்கா தனது ஐந்தாவது கடற்படைப் பிரிவை (5th Fleet) தயார் நிலையில் வைத்துள்ளதால், வளைகுடாப் போர் எப்போது வேண்டுமானாலும் ஒரு முழு அளவிலான உலகப்போராக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


