மத்திய கிழக்கில் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்காசியாவின் அணு ஆயுத நாடான பாகிஸ்தான் குறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாஷிங்டனில் நடைபெற்ற செனட் கமிட்டி கூட்டத்தில், அமெரிக்க தேசிய உளவுத்துறை இயக்குநர் துளசி காபர்ட் (Tulsi Gabbard), அமெரிக்காவிற்கு அணு ஆயுத அச்சுறுத்தல் அளிக்கும் முக்கிய நாடுகள் பட்டியலில் பாகிஸ்தானையும் சேர்த்துள்ளார்.
ரஷ்யா, சீனா, வடகொரியா மற்றும் ஈரானுக்கு அடுத்தபடியாகப் பாகிஸ்தானின் ஏவுகணைத் தொழில்நுட்பம் அமெரிக்காவின் நிலப்பகுதியைத் தாக்கும் அளவுக்கு (ICBM) வளர்ந்து வருவதாக அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பாகிஸ்தான் தொடர்ந்து மேம்படுத்தி வரும் அதிநவீன ஏவுகணைத் தொழில்நுட்பங்கள் தெற்காசியாவையும் தாண்டிச் செல்லும் திறன் கொண்டவை என்றும், இது தொடர்ந்தால் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தலாக மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான உறவு எப்போது வேண்டுமானாலும் அணு ஆயுதப் போராக மாறும் அபாயம் இருப்பதாகவும், கடந்த ஆண்டு நடந்த தாக்குதல்களின் போது அதிபர் டொனால்ட் டிரம்பின் தலையீடு மட்டுமே பெரிய விபத்தைத் தடுத்ததாகவும் அந்த 34 பக்க அறிக்கை கூறுகிறது.
ஈரான் மீதான தாக்குதல்களுக்குப் பிறகு, அமெரிக்கா தனது கவனத்தைப் பாகிஸ்தான் பக்கம் திருப்புவது, ஒருவேளை ஈரானைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீதும் தடைகள் அல்லது ராணுவ நடவடிக்கைகள் பாயலாமோ என்ற அச்சத்தைச் சர்வதேச அரங்கில் ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் இந்தத் தகவல்களை மறுத்துள்ளதுடன், தங்களது அணு ஆயுதங்கள் பாதுகாப்பானவை என்றும் தெரிவித்துள்ளனர்.


