மத்தியக் கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கேந்திரிய வித்யாலயா சங்கதன் (KVS), நாடு முழுவதும் உள்ள தனது பள்ளிகளில் 2026-27-ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை இன்று (மார்ச் 20, 2026) முதல் தொடங்கியுள்ளது. இதன்படி, எல்.கே.ஜி, யு.கே.ஜி போன்ற மழலையர் வகுப்புகள் (Balvatika) மற்றும் முதலாம் வகுப்பில் (Class 1) தங்கள் குழந்தைகளைச் சேர்க்க விரும்பும் பெற்றோர்கள், அதிகாரப்பூர்வ இணையதளமான kvsangathan.nic.in அல்லது பிரத்யேக அட்மிஷன் போர்ட்டல் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். முதலாம் வகுப்பில் சேர விரும்பும் குழந்தைகளுக்கு மார்ச் 31-ஆம் தேதி அன்று 6 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும் என்பது விதியாகும்.
விண்ணப்பங்களைப் பரிசீலித்த பிறகு, தகுதியான மாணவர்களின் பட்டியல் மற்றும் தேர்தல் முடிவுகள் வெவ்வேறு கட்டங்களாக (First, Second, and Third lists) வெளியிடப்படும் என்று கேந்திரிய வித்யாலயா நிர்வாகம் தெரிவித்துள்ளது. இட ஒதுக்கீடு மற்றும் முன்னுரிமை அடிப்படையில் (Priority Category) மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். குறிப்பாக, மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதோடு, கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ் 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும்.
விண்ணப்பிக்கும்போது குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வசிப்பிடச் சான்றிதழ் மற்றும் தேவைப்படின் சாதிச் சான்றிதழ் ஆகியவற்றை ஸ்கேன் செய்து பதிவேற்ற வேண்டும். விண்ணப்பிக்கக் கடைசித் தேதி இன்னும் சில வாரங்களில் முடிவடைய உள்ளதால், கடைசி நேர நெரிசலைத் தவிர்க்கப் பெற்றோர்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மொபைல் ஆப் மூலமாகவும் விண்ணப்பிக்கும் வசதியை கே.வி சங்கதன் இம்முறை அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


