தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், திரையுலகின் உச்ச நட்சத்திரமுமான விஜய்யின் கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’, தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் நிலவும் தொடர் இழுபறியால் கடந்த இரண்டு மாதங்களாகத் திரைக்கு வராமல் முடங்கியுள்ளது. இப்படத்தில் அரசியல் குறித்த கூர்மையான வசனங்களும், நேரடியான அரசியல் காட்சிகளும் இடம்பெற்றுள்ளதால், இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் (ECI) தீர ஆய்வு செய்ய வேண்டும் எனத் தணிக்கை வாரியம் (CBFC) அதிரடியாகப் பரிந்துரை செய்துள்ளது.
இது தொடர்பாகத் தமிழகத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள முக்கிய தகவல், ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறுகையில், ஒரு அரசியல் கட்சியின் தலைவராகவும், அதே சமயம் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராகவும் இருக்கும் ஒரு நபரின் திரைப்படம், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் சூழலில் வெளியாவது இந்தியத் தேர்தல் வரலாற்றிலேயே இதுவே முதல்முறை. இது ஒரு நுணுக்கமான விவகாரம் என்பதால், எளிதில் முடிவெடுக்க முடியாது. இது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஆலோசனை கேட்டிருக்கிறோம். அவர்களின் வழிகாட்டுதலின்படியே இறுதி முடிவு எடுக்கப்படும், எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் மும்பையில் 10 அதிகாரிகள் முன்னிலையில் நடந்த மறு தணிக்கைக்குப் பிறகும், இந்தப் படத்தின் ரிலீஸ் சிக்கல் தீரவில்லை. தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் முடிவைப் பொறுத்தே படத்தின் ரிலீஸ் அமையும். தற்போதைய சூழலில், கோடை விடுமுறையை முன்னிட்டு மே அல்லது ஜூன் மாதத்தில் ஜனநாயகன் பிரம்மாண்டமாகத் திரைக்கு வர அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.


