மத்திய கிழக்கில் இஸ்ரேல் – ஈரான் இடையே நிலவும் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலக நாடுகளுக்குச் செல்லும் 20% கச்சா எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயுவின் (LNG) முக்கியப் பாதையான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது. இதனால் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், இந்தப் பாதையைத் திறக்க அமெரிக்கா தற்போது நேரடி ராணுவ நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அமெரிக்காவின் மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM), இதற்காகத் தனது சக்திவாய்ந்த போர்க்கப்பல்களையும், தரைவழி இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் ஏ-10 (A-10 Warthog) ரகத் தாக்குதல் விமானங்களையும் அந்தப் பகுதிக்கு அனுப்பியுள்ளது.
ஈரான் இந்தப் பாதையில் தூவியுள்ள கண்ணிவெடிகள் (Naval Mines) மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள ஈரானின் தற்கொலைப்படை ட்ரோன்களை (Suicide Drones) முறியடிப்பதே அமெரிக்காவின் முதன்மை நோக்கமாகும். இந்தப் பாதையை ஒரு மாத காலத்திற்குள் முழுமையாக மீட்டு, சர்வதேசக் கப்பல் போக்குவரத்திற்குப் பாதுகாப்பானதாக மாற்ற அமெரிக்கப் படைகள் தீவிரமான இலக்கை நிர்ணயித்துள்ளன.
இதற்காகத் துபாய் மற்றும் கத்தாரில் உள்ள அமெரிக்கத் தளங்கள் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றன. அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கை ஈரானுக்கு ஒரு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ள போதிலும், இதனால் ஹார்முஸ் பகுதியில் ஒரு நேரடி மோதல் வெடிக்கும் அபாயம் இருப்பதாகவும் சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இருப்பினும், உலக நாடுகளின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய அமெரிக்காவின் இந்த ‘கோதா’ தவிர்க்க முடியாத ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.


