சென்னையிலிருந்து கோயம்புத்தூருக்கு குடும்பத்துடன் காரில் பயணம் செய்த ஐடி பெண் உபாசனா (28), கூகுள் மேப் காட்டிய குறுக்கு வழியை பயன்படுத்திய போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பணியிட மாற்றம் காரணமாக கோவைக்கு செல்ல இருந்த உபாசனா, தனது குடும்பத்தினருடன் அதிகாலை நேரத்தில் காரில் பயணம் தொடங்கினார். வழக்கமான தேசிய நெடுஞ்சாலை வழியை தவிர்த்து, கூகுள் மேப் காட்டிய சின்னசேலம் வழியை தேர்வு செய்து சென்றதாக கூறப்படுகிறது. அதிகாலை நேரம் என்பதால் சாலை வெறிச்சோடியிருந்த நிலையில், கார் அதிவேகமாக சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தத்தாதிருபுரம் அருகே வந்தபோது, முன்னால் சென்ற லாரியை முந்திச் செல்ல முயன்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்தது. பின்னர் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து மரத்தில் மோதி கார் முற்றிலும் நொறுங்கியது. இந்த விபத்தில், காரை ஓட்டிய உபாசனா மற்றும் முன் இருக்கையில் இருந்த அவரது மாமியார் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
காரின் பின்பக்கத்தில் இருந்த கணவர், மகன் மற்றும் உறவினர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், விபத்துக்குப் பிறகு காரிலிருந்து கட்டுக்கட்டாக பணம் சிதறி கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்பகுதி மக்கள் அவற்றை சேகரித்து ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவத்தில், பணத்தின் மூலமும், குறுக்கு வழி எடுத்த காரணமும் குறித்து போலீசார் பல கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் கால சோதனைகளை தவிர்க்கவே இந்த வழி தேர்வு செய்யப்பட்டதா என்ற கோணமும் ஆய்வு செய்யப்படுகிறது.




