தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, இன்று (மார்ச் 27, 2026) சென்னை அசோக் நகர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சொகுசு காரை நிறுத்திச் சோதனை செய்தபோது, அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். அந்தக் காரில் மூட்டை மூட்டையாகத் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. விசாரணையில், அவற்றுக்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.
மொத்தம் 381 கிலோ எடையுள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் சர்வதேசச் சந்தை மதிப்பு சுமார் 77 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது தமிழகத் தேர்தல் வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மிகப்பெரிய தொகையாகக் கருதப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் அனைத்தும் உடனடியாக பலத்த பாதுகாப்புடன் நுங்கம்பாக்கம் வருமானவரித்துறை (IT) அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்த நகைகள் எங்கு கொண்டு செல்லப்பட்டன? ஏதேனும் அரசியல் கட்சிக்குச் சொந்தமானதா? அல்லது நகைக்கடை விற்பனைக்காகக் கொண்டு செல்லப்பட்டதா? என்பது குறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தங்கம் விலை சவரன் ரூ.1.09 லட்சத்தைத் தாண்டியுள்ள நிலையில், இவ்வளவு பெரிய அளவிலான தங்கம் பிடிபட்டிருப்பது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்தக் கிடுக்கிப்பிடி நடவடிக்கையால், ஹவாலா கும்பல் மற்றும் அரசியல் புள்ளிகள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.


