உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு பெருமளவு குறைந்திருந்த நிலையில், தற்போது ஒமைக்ரான் வைரஸின் புதிய துணை வகையான BA.3.2, அதாவது ‘சிக்காடா’ (Cicada) வைரஸ் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2024-ல் முதன்முதலில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், நீண்ட காலம் ‘மறைந்திருந்து’ (Dormant) தற்போது ஐரோப்பிய நாடுகளான டென்மார்க், ஜெர்மனி மற்றும் அமெரிக்காவின் 25-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது.
இதனால்தான் இதற்கு ‘சிக்காடா’ (மண்ணுக்குள் நீண்ட காலம் மறைந்திருந்து வெளிவரும் பூச்சி) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த வைரஸில் சுமார் 70 முதல் 75 மரபணு மாற்றங்கள் (Mutations) ஏற்பட்டுள்ளதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது முந்தைய தடுப்பூசிகள் மற்றும் இயற்கை நோய் எதிர்ப்பு சக்தியைத் தாண்டி உடலுக்குள் நுழையும் ‘இம்யூன் எஸ்கேப்’ (Immune Escape) தன்மையைக் கொண்டுள்ளது.
இருப்பினும், இந்த ‘சிக்காடா’ வைரஸ் குறித்து மக்கள் பீதியடையத் தேவையில்லை என உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. இது வேகமாகப் பரவும் தன்மை கொண்டிருந்தாலும், நுரையீரலுக்குள் ஊடுருவும் திறன் குறைவாகவே உள்ளது. இதனால் இது உயிருக்கு ஆபத்தான அல்லது தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தாது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கடுமையான தொண்டை வலி, காய்ச்சல், உடல் சோர்வு மற்றும் சிலருக்கு வயிற்றுப் போக்கு ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாகச் சொல்லப்படுகின்றன. தற்போதுள்ள தடுப்பூசிகள் நோய்த்தொற்றைத் தடுக்கத் தவறினாலும், மரணம் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்படுவதைத் தடுக்கும் வலிமையைக் கொண்டுள்ளன. சர்வதேச அளவில் இந்தப் பரவல் கண்காணிக்கப்பட்டு வந்தாலும், இந்தியாவில் தற்போதைக்கு இதன் தாக்கம் இல்லை என்பது நிம்மதியளிக்கும் விஷயம். இருந்தாலும், தேர்தல் கூட்டங்கள் மற்றும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது பாதுகாப்பானது எனச் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.


