தமிழகத்தையே அதிரவைத்த சாத்தான்குளம் தந்தை மகன் லாக்கப் மரண வழக்கில் முக்கிய திருப்பம் உருவாகியுள்ளது. 9 போலீசார் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்பட உள்ளன. 2020 ஆம் ஆண்டு, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது காவல்துறையினர் நடத்திய கடுமையான தாக்குதலால் இருவரும் தீவிரமாக காயமடைந்து, பின்னர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கண்டனத்தை கிளப்பியது. வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு விசாரணை Central Bureau of Investigation (CBI)க்கு மாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து நடந்த விசாரணையில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 9 போலீசார் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டது.
மதுரை முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் சுமார் 6 ஆண்டுகளாக நடைபெற்ற விசாரணையில், 100க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இதில் பெண் காவலர்கள் ரேவதி, பியூலா மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோரின் சாட்சியங்கள் முக்கிய பங்காற்றி வந்தன.
தீர்ப்பை வழங்கிய நீதிபதி முத்துகுமரன், பாதிக்கப்பட்ட தந்தை மகனுக்கு உடல்நல பிரச்சனைகள் இருந்தாலும், கடுமையான தாக்குதலே மரணத்திற்குக் காரணம், என்று குறிப்பிட்டார். மேலும், போலீசார் தங்களுக்குள் பேசிக்கொண்ட உரையாடல்களும் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்துவதாக கூறப்பட்டது.
இதனையடுத்து, 9 போலீசாரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு விதிக்கப்படும் தண்டனை குறித்து இன்று முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளது.


