இந்திய ரயில்வே அமைச்சகம், ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு கடைசி நேரத்தில் ரத்து செய்பவர்களைக் கட்டுப்படுத்தவும், தேவையற்ற முன்பதிவுகளைத் தவிர்க்கவும் புதிய ரத்து விதிகளை இன்று (ஏப்ரல் 1, 2026) முதல் அமல்படுத்தியுள்ளது. இந்த புதிய விதிகளின்படி, பயணிகள் தங்களது பயணத் திட்டத்தில் மாற்றம் ஏற்பட்டால் முன்னதாகவே முடிவெடுப்பது அவசியமாகிறது. ரயில் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு (3 நாட்கள்) முன்னதாக டிக்கெட்டை ரத்து செய்தால், பழைய நடைமுறைப்படியே குறைந்தபட்ச ரத்து கட்டணம் (Cancellation Charges) மட்டுமே பிடித்தம் செய்யப்படும். இது பயணிகளுக்கு ஓரளவிற்கு நிம்மதியளிக்கும் விஷயமாக உள்ளது.
இருப்பினும், ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரையிலான இடைவெளியில் டிக்கெட்டை ரத்து செய்தால், மொத்த பயணக் கட்டணத்தில் 50 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமாக, ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் டிக்கெட்டை ரத்து செய்தால், ஒரு பைசா கூட திரும்பப் பெற முடியாது (Zero Refund). அதாவது, கடைசி நேரத்தில் பிளான் மாறி டிக்கெட்டை ரத்து செய்ய நினைப்பவர்களுக்குப் பண இழப்பு நிச்சயம்.
இதுவரை 4 மணி நேரத்திற்கு முன்னதாக ரத்து செய்தால் ஓரளவிற்குப் பணம் கிடைத்து வந்த நிலையில், தற்போது அந்த கால அவகாசம் 8 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அதிரடி மாற்றத்தால் அவசரப் பயணங்களை மேற்கொள்ளும் நடுத்தர மக்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ரயில்வேயின் இந்த ‘ஏப்ரல் 1’ அதிரடி, பயணிகளிடையே ஒருவித அச்சத்தையும், திட்டமிட்டுப் பயணிக்கும் அவசியத்தையும் உருவாக்கியுள்ளது.


