தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் மதுரை மத்திய தொகுதி எப்போதும் ஒரு விஐபி தொகுதியாகவே இருந்து வருகிறது. இந்த முறை அங்கு அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஏ.சி. சண்முகத்தின் புதிய நீதிக் கட்சி சார்பில், பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் சுந்தர்.சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் அதிமுகவின் ‘இரட்டை இலை’ சின்னத்திலேயே களம் காண்கிறார். இது குறித்து இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மதுரை மத்திய தொகுதியில் உண்மையான போட்டி என்பது பாரம்பரியமிக்க இரட்டை இலைக்கும் உதயசூரியனுக்கும் இடையேதான். நான் இங்கு மக்களுக்காகப் பணியாற்ற வந்திருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
குறிப்பாக, நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ (TVK) குறித்தும், விஜய் குறித்தும் அவரிடம் கேட்கப்பட்ட போது, “விஜய் எனது நீண்ட கால நண்பர். அவர் ஒரு லட்சியத்தோடு அரசியலுக்கு வந்திருக்கிறார். அவரைப் பற்றியோ அல்லது அவரது கட்சி பற்றியோ நான் எந்த விமர்சனமும் செய்ய மாட்டேன். ஒவ்வொருவருக்கும் ஒரு அரசியல் பார்வை இருக்கும்; ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்” என மிகவும் முதிர்ச்சியான பதிலை அளித்தார்.
மதுரையில் திமுக சார்பில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ள நிலையில், சுந்தர்.சியின் வருகை அந்தத் தொகுதியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சுந்தர்.சியின் மனைவி குஷ்பு ஏற்கனவே பாஜகவில் முக்கியப் பொறுப்பில் உள்ள நிலையில், கணவர் அதிமுக சின்னத்தில் போட்டியிடுவது கூட்டணிக் கட்சிகளிடையே ஒரு புதிய இணக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சினிமாவைத் தாண்டி அரசியலில் சுந்தர்.சி எந்த அளவுக்கு ‘கலகலப்பு’ செய்வார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


