நிலவில் மனிதன் வாழப் புதிய தொடக்கம்!! வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஆர்டெமிஸ்-2!!

nasa-artemis-2-mission-launch-success-april-2-2026-moon-mission-crew-details

விண்வெளி வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம் இன்று தொடங்கியுள்ளது. அமெரிக்காவின் நாசா (NASA) விண்வெளி ஆய்வு மையம், மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அழைத்துச் செல்லும் நோக்கத்துடன் உருவாக்கிய ஆர்டெமிஸ்-2 (Artemis-2) விண்கலம், ஃபுளோரிடாவில் உள்ள கென்னடி ஸ்பேஸ் சென்டரிலிருந்து இந்திய நேரப்படி இன்று (ஏப்ரல் 2, 2026) அதிகாலை 4.05 மணிக்கு (அமெரிக்க நேரப்படி ஏப்ரல் 1 மாலை 6.35) வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

உலகின் சக்திவாய்ந்த எஸ்எல்எஸ் (SLS) ராக்கெட் மூலம் ஏவப்பட்ட இந்த ‘ஓரியன்’ விண்கலத்தில், நான்கு விண்வெளி வீரர்கள் தங்களது 10 நாள் வரலாற்றுப் பயணத்தைத் தொடங்கியுள்ளனர். 1972-ல் அப்பல்லோ-17 மிஷனுக்குப் பிறகு, சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பின் மனிதர்கள் நிலவின் சுற்றுவட்டாரப் பகுதிக்குச் செல்வது இதுவே முதல் முறையாகும்.

இந்த மிஷனில் கமாண்டர் ரீட் வைஸ்மேன், பைலட் விக்டர் க்ளோவர், மற்றும் மிஷன் ஸ்பெஷலிஸ்ட்கள் கிறிஸ்டினா கோக், ஜெரமி ஹேன்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் கிறிஸ்டினா கோக் நிலவை நோக்கிப் பயணிக்கும் முதல் பெண் என்ற பெருமையையும், விக்டர் க்ளோவர் முதல் கறுப்பின வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளனர். இந்த 10 நாள் பயணத்தில் வீரர்கள் நிலவில் தரையிறங்க மாட்டார்கள்; மாறாக நிலவைச் சுற்றி வந்து, அங்கு மனிதர்கள் தங்குவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் விண்கலத்தின் பாதுகாப்பு அம்சங்களைச் சோதிப்பார்கள்.

நிலவின் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி ‘ஸ்லிங்ஷாட்’ முறையில் மீண்டும் பூமிக்குத் திரும்பும் இந்த விண்கலம், ஏப்ரல் 10-ஆம் தேதி கலிஃபோர்னியா கடல் பகுதியில் வந்து இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவதற்கான ஒரு முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram