மத்திய ஆசியாவில் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு இடையிலான போர் ஒரு அபாயகரமான கட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஈரான் அரசுக்கு இடையே எட்டப்பட்ட இரண்டு வார கால தற்காலிகப் போர் நிறுத்தத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிரடியாக நிராகரித்துள்ளார். “இந்த போர் நிறுத்தம் ஈரானுக்கு மட்டுமே பொருந்தும், லெபனானுக்கு அல்ல.
ஹிஸ்புல்லாக்கள் இஸ்ரேலிய எல்லைகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் வரை எங்கள் ராணுவ நடவடிக்கை முழு வீச்சில் தொடரும்” என அவர் இன்று (ஏப்ரல் 10, 2026) தனது ‘X’ தளத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். ஹிஸ்புல்லாக்களின் ராணுவத் தளவாடங்கள் மற்றும் தலைமைப் பீடங்களை முடக்குவதே இஸ்ரேலின் முதன்மை இலக்கு என அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், நேற்று பெய்ரூட் மற்றும் தெற்கு லெபனான் பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய மிகக்கடுமையான வான்வழித் தாக்குதல்களில் சுமார் 303 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 1,100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. போர் தொடங்கிய பிப்ரவரி 28-க்குப் பிறகு லெபனானில் ஏற்பட்ட மிக மோசமான உயிரிழப்பு இதுவாகும். இருப்பினும், நெதன்யாகு தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார்.
“எங்கள் நாட்டின் வடக்கு பகுதி மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வரை, ஹிஸ்புல்லாக்களுக்கு எதிரான தாக்குதல் ஓயாது” என அவர் முழங்கியுள்ளார். ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடக்க வேண்டும் எனப் லெபனான் அரசு கோரிக்கை விடுத்து வரும் வேளையில், இஸ்ரேலின் இந்தத் தொடர் தாக்குதல் மத்திய ஆசியாவில் நிலவும் அமைதியைச் சிதைக்கும் எனப் பாகிஸ்தான் மற்றும் ஈரான் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.




