திருப்பத்தூர்: இப்படி கூடவா சாவு வரும் என்று, திரும்பி பார்க்க வைக்கும் விதமாக திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடந்த சம்பவம் இருக்கிறது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் செயல்பட்டு வந்த ஒரு தனியார் பல் மருத்துவமனையில் நடைபெற்ற அலட்சியமான சுகாதார நடைமுறைகள் காரணமாக, பாக்டீரியா தொற்று பரவியதால் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘அறிவு பல் மருத்துவமனை’ என்ற பெயரில் இயக்கப்பட்ட வந்த கிளினிக்கில், பல் சிகிச்சை மேற்கொண்டவர்கள் அண்மையில் தொடர்ந்து உயிரிழந்ததை அடுத்து, அதற்கு எதிராக முறைப்பாடுகள் எழுந்தன.
விசாரணையில், பல் மருத்துவர் பாதுகாப்பு விதிகளை பின்பற்றாமல், கருவிகளை முறையாக சுத்தம் செய்யாமல் பயன்படுத்தி வந்தது தெரியவந்துள்ளது.
சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் பல் திசுக்களை குத்தும் கருவி கொண்டு மருந்து பாட்டில்களை திறக்கவும் பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்தக் கருவிகளை வைத்து நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இதன் காரணமாக ‘நியூரோமெலியோய்டோசிஸ்’ எனப்படும் கடுமையான தொற்று பரவியதாகவும், அதில் எட்டு உயிர்கள் பறிபோனதாகவும் தெரிய வந்துள்ளது.
மருத்துவர் அறிவரசன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்டோரின் குடும்பங்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு பொது சுகாதார இயக்குனரகம் மற்றும் தேசிய தொற்று நோயியல் நிறுவனம் ஆகியவை இணைந்து விசாரணை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட மருத்துவருக்கு சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரை செய்துள்ளது. அலட்சியத்தால் எட்டு உயிர்கள் பறிபோயின.
மேலும், இதுபோன்ற தவறுகளை எதிர் காலத்தில் தவிர்க்க அனைத்து தனியார் மருத்துவமனைகளும் கட்டாயம் சுகாதார விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.