சென்னை: மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் மற்றும் நடிகருமான கமல்ஹாசன் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். தமிழகத்தில் காலியாக இருக்கும் 6 ராஜ்யசபா இடங்களை இந்திய தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்தது. ராஜ்யசபா தேர்தலானது வரும் ஜூன் 19 ஆம் தேதி நடைபெறும் உள்ள நிலையில் திமுக சார்பில் வழக்கறிஞர் வில்சன், கவிஞர் சல்மா, மநீம தலைவர் கமல்ஹாசன் மற்றும் திமுக நிர்வாகி சிவலிங்கம் ஆகியோர் 4 வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டது.
அதிமுக சார்பில் வழக்கறிஞர் இன்ப துறை மற்றும் தனபால் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 9 ஆம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம் என்ற நிலையில் நேற்று தங்களது வேட்பு மனுவை தலைமை செயலகத்தில் தாக்கல் செய்தார் கமல்ஹாசன்.
தனது சொத்து விவரங்கள் படி, 2023-24 ஆம் நிதியாண்டில் ஒரு 78.90 கோடி வருவாய் என குறிப்பிட்டுள்ளார். அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் முறையே ரூ 59.69 கோடி மற்றும் ரூ 245.86 கோடி என்றும் தெரிவித்துள்ளார். மேலும்,49.67 கோடி ரூபாய் கடனாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டை, சோழிங்கநல்லூர், உத்தண்டி போன்ற இடங்களில் உள்ள வணிக கட்டிடங்களின் சந்தை மதிப்பு ரூ.111.1 கோடியாகும். திண்டுக்கல் உள்ள ஒரு கிராமத்தில் ரூ 22.24 கோடி விலை மதிப்புள்ள விவசாய நிலமும் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கமல்ஹாசன் கையில் உள்ள பண மதிப்பு 2.60 லட்சம் என்றும், நான்கு சக்கர வாகனங்களில் ஒட்டுமொத்த மதிப்பு 8.43 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த சொத்து மதிப்பு ரூ.305.55 கோடி என்று குறிப்பிட்டுள்ளார். 2019-20 ஆண்டிலிருந்து 78.9 கோடியாக உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
திமுக ஆதரவுடன் 2024 மக்களவைத் தேர்தலில் பிரச்சாரம் செய்தார். அதற்கு பதிலாக மாநிலங்களவை தேர்தலில் கமல்ஹாசனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என திமுக உறுதி அளித்தது. இந்நிலையில் ராஜ்யசபா தேர்தலுக்கு போட்டியிட கமல்ஹாசன் தயாராகி வருகிறார்.





