தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் இளைய மகனும், தற்போது பிஸியான நடிகராக இருக்கும் அகில் அக்கினேனி, தனது நீண்டகால காதலி ஜைனப் ரவுட்ஜியை இன்று (ஜூன் 6) திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களுக்கு முன்னால் தான் நாகர்ஜுனாவின் மூத்த மகன் திருமணம் நடைபெற்ற நிலையில், தற்போது அவரது இளைய மகனின் இந்த திருமணம், நாகார்ஜுனாவின் ஜூப்ளி ஹில்ஸ் இல்லத்தில், குடும்பத்தினர் மற்றும் சில நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் எளிமையான முறையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிரஞ்சீவி, ராம்சரண், வெங்கடேஷ் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் சிலரும் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜைனப் ரவுட்ஜி ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபர் சுல்பி ராவ்ட்ஜியின் மகளாகும். இவர் ஓவியத்துறையில் தனக்கென ஒரு சிறந்த இடம் பிடித்துள்ளார். கடந்த மூன்று வருடங்களாக அகில் மற்றும் ஜைனப் காதலில் இருந்தனர். இருவருக்கும் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது.
இன்று நடந்த திருமணத்தை தொடர்ந்து, வரும் ஜூன் 8ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் திரைத்துறையினருக்கான சிறப்பான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இயக்குநர் பிரசாந்த் நீல், நடிகர் ஷர்வானந்த், இயக்குநர் ராஜமௌலி மற்றும் அவரது மகன் கார்த்திகேயா, இந்தியா கிரிக்கெட் வீரர் திலக் வர்மா உள்ளிட்டோர் இதில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இருவரின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன. ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களிடம் இருந்து புதுமண தம்பதிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அகில் – ஜைனப் ஜோடிக்கு எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!





