தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் பத்து மாதங்களே இருப்பதை ஒட்டி பாஜக கூட்டணிகளை வலுப்படுத்தும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே தேமுதிக ஒருங்கிணைப்பாளர் பிரேமலதா அவர்களுடன் பாஜக கூட்டணிக்கு சமரசம் பேசியிருந்தது. இருப்பினும், தற்சமயம் வரை தேமுதிக பாஜக கூட்டணி குறித்து எந்த ஒரு வெளிப்படையான அறிவிப்பும் வெளியிடவில்லை. வருகின்ற ஜனவரி மாதம் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியிடுவோம் என்று பிரேமலதா கூறியிருந்தார். ஆனால் அச்சமயம் கூட்டணியில் இணைந்தும் பயனில்லை என்று பாஜக தேமுதிகவை வலியுறுத்தியுள்ளது.
வருகின்ற செப்டம்பர் மாதம் பிரதமர் மோடியின் பிறந்த நாளை ஒட்டி பாஜக சார்பில் பெருவிழா ஏற்பாடு செய்யப்படவுள்ளது. அந்த விழாவில் கூட்டணி கட்சித் தலைவர்களை வரவழைத்து, தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே கூட்டணி முடிவு குறித்து விரைவாக பதில் அளிக்குமாறு தேமுதிக மற்றும் பாமக கட்சிகளுக்கு பாஜக கெடுபிடி வைத்துள்ளது.
இந்நிலையில் இன்று அமித்ஷா மதுரை வரும் நிலையில், கூட்டணி குறித்து இதர கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து பேச திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தேர்தல் வியூகங்கள் குறித்தும், கட்சிப் பணிகள் குறித்தும் கலந்துரையாடல் நடத்தப்பட உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள பாஜக கட்சியினர் அமித்ஷா வருகை குறித்து பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். கட்சி மூத்த தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை அனைவருக்குமான தேர்தல் பணி குறித்தும், கட்சி கூட்டணி குறித்தும் இவர் வருகை மூலம் தெளிவான முடிவு கிடைக்கும் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.





