இந்திய ரிசர்வ் வங்கி (RBI), தங்கக் கடன்களுக்கான கடன் மதிப்பு (LTV) விகிதத்தை 75 சதவீதத்திலிருந்து 85 சதவீதமாக உயர்த்தும் பெரிய முடிவை எடுத்துள்ளது. இது பல நிறுவனங்களின் பங்குகளில் ஏற்றத்திற்கு வழிவகுத்து, சந்தையில் நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இது சிறிய கடன் வாங்குபவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், ரூ.2.5 லட்சம் வரையிலான தங்கக் கடன்களுக்கு மட்டுமே இந்த புதிய LTV விகிதம் பொருந்தும். இதனால், குறிப்பாக சிறு வணிகர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் அவசர தேவைகளை பூர்த்தி செய்ய தங்கத்தை அடமானம் வைத்து, தற்போது ரூ.1 லட்சம் மதிப்புள்ள தங்கத்துக்கு முன்பு ரூ.75,000 கடன் கிடைத்ததைவிட, இப்போது ரூ.85,000 வரை கடன் பெற்றுக் கொள்ள முடியும்.
தங்க கடன் என்பது இந்தியாவில் மிகவும் பிரபலமான கடன் வகை. தங்கம் இந்திய குடும்பங்களில் பெரும்பாலும் நிதி தேவைக்காக பாதுகாப்பாக வைக்கப்படும் முதலீடாகவும் பயன்படுகிறது. எப்போதாவது பணத் தேவையிருந்தால், தங்கத்தை அடமானம் வைத்து உடனே கடன் பெறுவது மிகவும் சுலபமானது. இந்த புதிய கடன் மதிப்பு LTV உயரும் மாற்றம் இந்த நடைமுறையை இன்னும் எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, தங்கக் கடன் வழங்கும் நிறுவனங்களின் பங்குகள், சந்தையில் அதிகரித்தன. முத்தூட் ஃபைனான்ஸ் பங்குகள் 7 சதவீதம் உயர்ந்து ரூ.2470 ஆகவும், மணப்புரம் ஃபைனான்ஸ் பங்குகள் 5 சதவீதம் உயர்ந்து ரூ.246.48 ஆகவும், ஐஐஎஃப்எல் ஃபைனான்ஸ் பங்குகள் 4.5 சதவீதம் உயர்ந்து ரூ.452.45 ஆகவும் உயர்ந்தன. RBI இந்த தீர்மானத்தை எடுத்ததன் பின்னணி சிறு கடனாளர்கள் தங்கள் தேவைகளை எளிதாக பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே. இது, குறிப்பாக, நாட்டின் கிராமப்புறங்களில் மற்றும் சிறு வணிகர்களுக்கிடையே பெரும் நிவாரணமாக அமையும். இதனால், குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு இன்னும் நன்மை கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த தீர்மானம், இந்தியாவில் தங்க அடமானக் கடன்களை எடுக்கும் நபர்களுக்கு ஒரு பெரிய நம்பிக்கையை வழங்கும். இது சந்தையில் முதலீடு செய்வோருக்கும் நிறுவனங்களுக்கும் கூட ஒரு புதிய வாய்ப்பை உருவாக்கும்.