உத்தரபிரதேசம் மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள விவசாயி கல்லுவின் வீட்டில் நிகழ்ந்த இந்த சம்பவம் அந்த கிராமத்தையே உலுக்கியிருக்கிறது. “மினி” என்ற அந்த செல்ல நாய் தனது உரிமையாளர் குடும்பத்தை விஷப்பாம்பிலிருந்து காப்பாற்றி வீர மரணம் அடைந்தது. மே 2 ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில், குடும்பத்தினர் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில், மிகவும் விஷமுள்ள ரஸல் வகை பாம்பு வீட்டு வளாகத்தில் நுழைந்தது. மிகவும் ஆபத்தான இந்த நிலைமையில் முதலாக எதிர்த்து நின்றது அந்த வீட்டு நாய், மினி.
முதலில் பாம்பை பார்த்ததும், மினி அதிக சத்தம் எழுப்பி உரிமையாளர் குடும்பத்தினரை விழித்தெழச்செய்தது. அதன்பிறகு பாம்பை தன்னுடைய பற்களால் பிடித்து, அது வீட்டினரிடம் செல்லாமல் தடுத்து நிறுத்தியது. அந்த நேரத்தில் பாம்பு தனது தற்காத்து போராட்டமாக 26 முறை மினியை கடித்தது என தெரிகிறது.
வீட்டு மக்கள் அவசரமாக பாம்பை பிடித்து காட்டில் விட்டனர். உடனே மினியை அருகிலுள்ள கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அந்தக் கொடிய விஷம் உடல் முழுவதும் பரவி, 27 மணி நேரம் போராடிய பிறகு மினி உயிரிழந்தது.
மினியின் தியாகத்தைப் பார்த்த வீட்டு மக்கள் மற்றும் கிராமத்தினர் மிகவும் நெகிழ்ந்தனர். “நாய் என்றாலே மனிதனுக்கு மிகுந்த விசுவாசமான தோழன் என்பதை மினி இன்னொரு முறை நிரூபித்தது” என்று கூறி, அனைவரும் மினிக்கு அஞ்சலி செலுத்தினர். கிராம மக்கள் மினியின் உருவத்திற்கு நினைவாக ஒரு சிறிய சிலை அமைக்க திட்டமிட்டு வருகின்றனர் என்றும், “மனிதனுக்கும் மிருகங்களுக்கும் இடையே இருக்கும் உண்மையான பாசத்தின் சின்னம் தான் மினி” என சமூக வலைத்தளங்களில் மக்கள் பாராட்டி வருகின்றனர். இந்த சம்பவம் நாய்களின் விசுவாசத்தையும், மனிதனுக்கும் மிருகத்துக்கும் இடையேயான பாசத்தின் வலிமையையும் மேலும் வலியுறுத்துகிறது.