நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) இன்று, அரசியல் வரலாற்றில் புதிய தலைமுறை தலைவர்களை வரவேற்கும் நாளாக அமைந்திருக்கிறது. விருப்ப ஓய்வு பெற்ற IRS அதிகாரி அருண்ராஜ், இன்று (ஜூன் 10) விஜய்யை நேரில் சந்தித்து தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணைய உள்ளார். அவருக்கு கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் என்ற முக்கிய பதவி வழங்கப்படலாம் என அக்கட்சி வட்டாரங்களில் தீவிரமாக பேசப்படுகின்றது.
அருண்ராஜ், பல ஆண்டுகளாக அரசியல் மட்டுமின்றி சமூக சேவையிலும் ஈடுபட்டவராவார். அரசு நிர்வாகத்தின் அனுபவமும், அவரது கல்வித்திறமையும், தவெகாவின் கொள்கை பரப்புக்கு புதிய உயிரோட்டம் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது இணைப்பு, தவெகவின் நிர்வாகத்தையும், தேர்தல் திட்டத்தையும் வலுப்படுத்தும் வகையில் அமையும் என பார்க்கப்படுகிறது. அருண்ராஜுக்கு உடனே முக்கிய பொறுப்பு வழங்கும் விஷயத்தில் தவெகவில் முழுமையான ஒருமித்த கருத்து இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சிலர், “கட்சியில் புதியவர்கள் ஒருவருக்குப் பதவி வழங்குவது முன்னோடிகளுக்கு அநியாயம்” என எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேவேளை, விஜய்யின் நெருங்கிய அணியினர், “கட்சி வளர்ச்சி, நம்பிக்கை, மாற்றம் ஆகியவற்றை கொண்டு வரும் செயல் தான் தற்போது முக்கியம்” என்ற முறையில் அருண்ராஜுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இன்றைய நிகழ்ச்சியில், திமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ. டேவிட் செல்வன் உள்ளிட்டோர் தவெகவில் இணைய இருக்கின்றனர். டேவிட் செல்வன், கடந்த சில ஆண்டுகளாக திமுகவில் இருந்து ஒதுங்கிய நிலையில், நடிகர் விஜய்யுடன் நெருங்கிய உறவை பேணியவராவார்.
அதேபோல், அதிமுகவை விட்டு பாஜகவுக்கு சென்ற பின்னர் அங்கும் நிலைமையை சந்தேகத்துடன் பார்த்த ராஜலட்சுமி தற்போது பாஜக-அதிமுக கூட்டணி உறுதியாகி விட்டதால் பாஜகவில் இருந்து வெளியேறி தவெகவில் இணைய உள்ளார். அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் ஶ்ரீதரன், ஓய்வு பெற்ற நீதிபதி சுபாஷ், ஜேபிஆர் கல்வி அறக்கட்டளையின் மரிய வில்சன் ஆகியோரும் இன்று விஜய் முன்னிலையில் தவெகவில் இணைய உள்ளனர். இன்றைய நிகழ்வில், திமுக-அதிமுகவில் இருந்து தனி தலைவர்களை இணைக்கும் முயற்சி நடந்தாலும், மிகவும் பரபரப்பாக பேசப்படும் “அதிரடி தலைகள்” எனப்படும் முக்கிய பிரமுகர்கள் இன்னும் இணையவில்லை எனவும்,
ஆனால் விரைவில் அவர்கள் இணைய வாய்ப்பு இருக்கிறது எனவும் தவெக வட்டாரங்கள் கூறுகின்றன. இந்நிலையில், தவெகாவின் வளர்ச்சியில் இந்த புதிய நபர்களின் இணைப்பு, கட்சியின் பிரமுகர் அடையாளங்களை மேம்படுத்தும் புதிய அணுகுமுறையை வெளிப்படுத்துவதாகும். விஜய் கட்சி தற்போது திமுக-அதிமுக ஆதரவாளர்களை கவரும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது தமிழக அரசியல் வரலாற்றில் மாற்றம் ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.