கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் நடைபெற்ற தமிழக வாழ்வுரிமை கட்சி நிகழ்ச்சியில், கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் வேல்முருகன், தமிழ் சினிமா மற்றும் நடிகர் விஜயை கடுமையாக விமர்சித்தார். “தற்குறிகளும் தருதலைகளும்” என்ற கூற்றை பயன்படுத்திய அவர், ரசிகர்களையும் சமூக வலைதள சினிமா கலாச்சாரத்தையும் நேரடியாக விமர்சித்தார். பல்வேறு கட்சிகளில் இருந்து நூற்றுக்கணக்கானோர் தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்தனர். அவர்களை வரவேற்கும் வகையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வேல்முருகன் உரையாற்றினார். “ஒரு ஹீரோ கூட வரவில்லை நாங்கள் தான் போராடுகிறோம்”
“தேன்கனிக்கோட்டையிலிருந்து சென்னைக்கு ஒரு பேருந்து எடுக்க 70,000 ரூபாய் செலவாகிறது. 60 பேருக்குத் தினமும் மூன்று வேளை சாப்பாடு. இவை எல்லாம் செலவழித்து போராடுவது எங்கள் தொண்டர்கள் தான். ஒரு ரசிகனும் களத்தில் இல்லை, ஒரு நடிகனும் இல்லை,” என அவர் கூறினார்.
“தற்குறிகளும் தருதலைகளும் என்னை ‘வேல்முருகன் யார்?’ என கேட்கிறார்கள். நான் தமிழ்நாடு விடுதலைப் படையில் பணியாற்றியவன். நீங்களெல்லாம் சினிமாவில் ஆடிக் கொண்டிருந்த போதே நாங்கள் தமிழர்களுக்காக போராடியவர்கள்,” எனவும் தெரிவித்தார். பாலா, ராகவா லாரன்ஸ் போன்ற நடிகர்கள் ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்வதற்காகவே தனது சொந்த வருமானத்தை செலவழிக்கிறார்கள் என்றும், அவர்கள் போல பிற நடிகர்களும் சமூகப் பொறுப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். “விவாதிக்க நேரில் வாருங்கள்” இன்றைக்கு சிலர் பள்ளி மாணவர்களிடம் என்னைப் பற்றி பேசச் சொல்கிறார்கள். நேரில் வாருங்கள், நான் விவாதிக்கத் தயார். மக்களோடு நின்று, மக்களின் பிரச்சனைகளை எடுத்துக் கொள்ளும் அரசியலே உண்மையான அரசியல், என வலியுறுத்தினார். “டிக் டாக், சின்னத்திரை, படங்கள் இவை அனைத்தும் தமிழ் சமூகத்தை சீரழிக்கின்றன. மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். ரசிகர் கலாச்சாரம் அரசியலை முடக்கக் கூடாது,” என்றார். வேல்முருகனின் இந்த உரை, ரசிகர்களையும் சினிமா பிரபலங்களையும் வெகுவாக விமர்சிக்கின்றதோடு, தமிழ் அரசியலில் உண்மையான பங்களிப்பை வலியுறுத்தும் புதிய அரசியல் குரலாக பார்க்கப்படுகிறது.





