கடந்த வாரம் அகமதாபாத்தைச் சேர்ந்த ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட பயங்கர விபத்தில், புதிய தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. அமெரிக்க கடற்படை முன்னாள் விமானி கேப்டன் ஸ்டீவ் ஷைப்னர், தனது தொழில்நுட்ப நிபுணத்துவத்தின் அடிப்படையில், விமானம் இரு என்ஜின்களும் ஒரே நேரத்தில் செயலிழந்ததால் விபத்துக்கு உள்ளானதாக தெரிவித்துள்ளார்.
விபத்திற்கான வீடியோ காட்சியை பலமுறை ஆய்வு செய்த ஸ்டீவ் ஷைப்னர், விமானத்தின் கீழ் சிறிய சாம்பல் நிற உருண்ட பொருள் RAT என அடையாளம் கண்டுள்ளார். இது விமானம் சக்தியிழந்துள்ள சூழ்நிலைகளில் மட்டுமே இயங்கக்கூடியது. இதன் மூலம், விமானம் சக்தி இழந்திருப்பதும், இயந்திர பிழை ஏற்பட்டிருப்பதும் உறுதியாகின்றன. விமானத்திலிருந்து ‘மேடே’ (மரண ஆபத்து அழைப்பு) ஒலி பதிவாகியுள்ளது. இது எஞ்சின் செயலிழப்பு அல்லது மின்சார கோளாறு ஆகியவற்றின் நேரடி அறிகுறியாகும்.
787 ட்ரீம்லைனர் விமானம் ரன்வேவிலிருந்து புறப்பட்ட பிறகும், 450 அடி உயரத்தை கூட கடந்துவைக்கவில்லை என்பதும் கவலையளிக்கிறது. முன்னாள் விமானி ராகேஷ் ராய் கூறுவதன்படி, விமானத்தின் லேண்டிங் கியர் மேலெழுப்பப்படவில்லை என்பது வீடியோவில் தெளிவாகத் தெரிய வருகிறது. இது விமானத்தை மேலெழாத நிலைக்குத் தள்ளும் ஒரு முக்கியமான காரணம் என கூறப்படுகிறது. விபத்து நடந்த இடத்திலிருந்து கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் பதிவாகியுள்ள விமானத்துக்குள் நடந்த உரையாடல்கள், எஞ்சின் செயல்பாடு, ஒலி மற்றும் தரவுகள் ஆகியவை விபத்துக்கான உண்மை காரணங்களை விரைவில் வெளிச்சத்திற்கு கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் DGCA, அமெரிக்காவின் FAA மற்றும் பிரிட்டனின் AAIB ஆகியவை இந்நிகழ்வை சேர்ந்து விசாரிக்கின்றன. இந்த விமானத்தில் பயணம் செய்த 241 பயணிகள், தரையில் இருந்த 24 பேர் உள்ளிட்ட அனைவரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மின்சார சிக்கல், எரிபொருள் மாசுபாடு, பறவையுடன் மோதல், பிளாப் கோளாறு ஆகியவை சாத்தியமான காரணங்கள் என நிபுணர்கள் கூறியிருந்தாலும், RAT இயங்கியிருப்பது மற்றும் மேடே அழைப்பு ஆகியவை இரு என்ஜின்களும் செயலிழந்திருக்கலாம் என்பதையே உறுதிப்படுத்துகிறது. அதிகாரப்பூர்வ விசாரணை முடிவுகள் வெளியாகும் வரை, இவை அனைத்தும் நிபுணர்களின் தொழில்நுட்ப கணிப்புகளே என்பதும் குறிப்பிடத்தக்கது.





