அரசியல் சூழலில் புதிய சர்ச்சை!! கைது செய்யப்படுவாரா சீமான்??

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழர்களின் பாரம்பரிய உணவுப் பொருள்களில் ஒன்றாகக் கருதப்படும் பனைச் சாறை விழிப்புணர்வூட்டும் வகையில், தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை பகுதியில் பனைமரத்தில் ஏறி ‘கள்’ இறக்கும் செயலில் ஈடுபட்டது சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, பல தரப்பிலிருந்து பரவலான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. சீமான் இந்த செயலை “பாரம்பரிய உணவுப் புரட்சி” எனக் கூறியுள்ளார்.

ஆனால் எதிர்க்கட்சிகள் இதை சட்ட விரோத செயல் என்றும், மதுவிலக்கு கொள்கையை தவறாகத் திருப்பிச் செல்லும் அரசியல் யுக்தியாகவும் கண்டிக்கின்றன. புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, “தடை செய்யப்பட்ட கல்பானத்தை தயாரித்து அருந்தியதோடு மட்டுமல்லாது, காவல்துறையை அரிவாளால் மிரட்டும் வகையில் நடந்திருக்கிறார் சீமான்” எனக் கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், 24 மணி நேரத்திற்குள் சீமான் மீது வழக்கு பதிந்து கைது செய்யாவிட்டால் மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

சீமான் தரப்பில் இது பாரம்பரிய உணவுப் பொருளுக்கான உரிமை மற்றும் இயற்கை வாழ்வியலின் பகுதியாக விளக்கப்படுகிறது. ஆனால், தமிழக மதுவிலக்கு சட்டத்தின் கீழ் ‘கள்’ என்பது ஒரு போதைப்பொருளாக வகைப்படுத்தப்படும் நிலையில், இதன் உற்பத்தி சட்டபூர்வமா என்பது குறித்து தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை. தமிழக மதுவிலக்கு மற்றும் போதைப்பொருள் தடையச் சட்டங்களின்படி, பனைச் சாறு இயற்கையாகவே பானமாதல் அடையும் பட்சத்தில், அதனைச் சேகரித்து பரிமாறுவது குறித்த கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால், அந்தச் சாறை காய்ச்சி, பதப்படுத்தி மதுபோல மாற்றும் செயல் சட்டவிரோதமாகக் கருதப்படுகிறது.

சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மேற்கொண்ட செயல் இதை மீறுகிறதா? அல்லது இயற்கை உணவுப் பயன்பாட்டுக்கான விழிப்புணர்வா என்பதற்கான சட்ட விளக்கத்தை காவல்துறையும், அரசு மந்திரிகள் மற்றும் சட்ட ஆலோசகர்களும் விரைவில் வெளியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது போன்ற செயற்பாடுகள் சமூகத்தில் பலவிதமான பிரதிபலிப்புகளை ஏற்படுத்துகின்றன. பலர் பாரம்பரிய உணவுகள் மீதான உரிமையை ஆதரிக்கின்றனர். அதேவேளையில், சிலர் மதுவிலக்குக் கொள்கையை வலியுறுத்தி சீமானின் செயலை கடுமையாக விமர்சிக்கின்றனர்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram