திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள கிராமத்தை சேர்ந்தவர் இந்த 13 வயது சிறுவன். தாராபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். பள்ளியை விட்டு வீட்டிற்கு வந்ததும் பெற்றோர்களின் செல்போன்களை எடுத்து வீடியோக்கள் பார்ப்பது வழக்கம். இந்த சம்பவம் நடந்த அன்றும் எப்போதும் போல் பள்ளியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த சிறுவன் பெற்றோர்களின் தொலைபேசியை தேடியுள்ளார். சம்பவம் நடந்த செவ்வாய்க்கிழமை மாலை பள்ளி முடித்து வந்தவுடன் தாயின் செல்போனை எடுத்துள்ளார்.
செல்போனை எடுத்து வீடியோக்கள் பார்த்துவிட்டு வீடியோ கேம் விளையாடி உள்ளார் அச்சிறுவன். இவருக்கு மூன்று வயதில் சகோதரன் இருக்கிறார். அப்போது மூன்று வயது சகோதரன் அழுது கொண்டே இருந்திருக்கிறான். தொடர்ந்து அழுது கொண்டிருந்த சிறுவனை கண்டு கொள்ளாமல் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருக்கிறான் சிறுவன்.
ஆத்திரமடைந்து சிறுவனின் தாயார் தம்பி அழுவது கூட தெரியாமல் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருக்கிறாய் என திட்டி செல்போனை பிடுங்கி உள்ளார். அச்சிறுவன் பூச்சிக்கொல்லி மருந்தை பார்த்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அச்சிறுவன் முருங்கை மரத்துக்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தினை எடுத்து குடித்துள்ளார்.
தாய் 3 வயது சிறுவனை எடுத்து அழுகையை நிறுத்த முயன்ற நேரத்தில் 13 வயது சிறுவன் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார். பார்த்த தாய் பதறி மயக்கமடைந்த நிலையில் சிறுவனை மீட்டு தாராபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர பரிசோதனைக்கு பின் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.