சென்னை: தமிழகத்தின் ஒரு சில இடங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களுக்கு இன்று முதல் 25ஆம் தேதி வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கையில், தமிழகத்தில் நேற்று மதியம் நிலவரப்படி மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள் மற்றும் இதர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக சின்ன கல்லாரில் 7 சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் சின்கோனா, வால்பாறை, நடுவட்டம், நீலகிரி மேல்கூடலூர் போன்ற பகுதிகளில் தலா 5 சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பார்வூட் பகுதிகளில் நான்கு சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இதர மாவட்டங்களான விழுப்புரம், ஈரோடு, சேலம், நாமக்கல் போன்ற மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. இவற்றிற்கிடையே மேற்கு திசை காற்றின் வேகம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி தமிழகத்தின் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று முதல் 25ஆம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என்று அறிவுறுத்தியுள்ளது. இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது வானிலை ஆய்வு மையம். தமிழகத்தின் ஒரு சில இடங்களில் நாளை வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் அதிகம் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை வரை மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.