அரசு அதிகாரி என அடையாளம் காட்டி வங்கி மேலாளரை திருமணம் செய்து ஏமாற்றிய இளம்பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல்லை சேர்ந்த நவீன்குமார் (29) கோவை நகரில் உள்ள ஒரு பிரபல தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் நவீன்குமாருக்கு, ராமாவரம்புதூர் பகுதியைச் சேர்ந்த தன்வர்தினி (27) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. அந்தச் சமயத்தில் தன்வர்தினி, பொள்ளாச்சியில் வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றுகிறேன் என்று தனது குடும்பத்தினர் மூலமாக நவீன்குமார் வீட்டாருக்கு கூறியிருந்தார்.
திருமணத்திற்குப் பிறகு நவீன்குமார் கோவையில் தனது வங்கி பணியில் தொடர, தன்வர்தினி தனது பணிக்காகப் பொள்ளாச்சிக்கு செல்வதாகக் கூறினார். வார இறுதி நாட்களில் மட்டும் இருவரும் குடும்பத்துடன் நேரம் செலவிட்டு வந்தனர். இதனால் யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. ஆனால் சில மாதங்களுக்கு முன்பு நவீன்குமாரின் உறவினர் ஒருவர் ஒரு வேலைக்காக பொள்ளாச்சியில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்துக்குச் சென்றபோது தன்வர்தினி பெயரை விசாரித்தார். அப்போது அங்கு அந்தப் பெயரில் யாரும் பணிபுரிவது இல்லை என்பது தெரிய வந்தது. இதைக் கேட்டதும் நவீன்குமாரின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
அதே நேரத்தில் தன்வர்தினியிடம் இதைப் பற்றி கேட்டபோது, சென்னையில் தலைமைச் செயலகத்திற்கு தன்னை மாற்றி உள்ளதாகக் கூறி மறுபடியும் சந்தேகத்தைத் தள்ளினார். ஆனால் சந்தேகம் தீராத நவீன்குமார் நேரிலேயே சென்னைக்கு சென்று அலுவலகங்களை விசாரித்தபோது தன்வர்தினி கூறிய அனைத்தும் பொய்யாகவும், வழங்கிய நியமன ஆவணங்கள் முழுவதும் போலியானவை என தெரிய வந்தது.மேலும் தன்வர்தினியின் கல்வி பின்னணி குறித்து நவீன்குமார் சுயமாகச் சோதனை செய்தபோது, அவர் பள்ளியில் 10, 12-ம் வகுப்புகள் வரை சிறப்பாக படித்து, சிவில் இன்ஜினியரிங் பட்டம் முடித்ததும், குரூப்-1 தேர்வு வரை சென்றதும் உண்மைதான் என தெரியவந்தது. ஆனால், அரசுப் பணிக்கு நியமனம் எங்கேயும் கிடைக்கவில்லை. அதே சமயத்தில் ஒரு நபர் பணம் வாங்கி அரசுப் பணியில் நியமனம் வாங்கித் தருவதாகக் கூறி மோசடியும் செய்திருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இதனையடுத்து நவீன்குமார் நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் கொடுத்தார். அதன் பேரில் தன்வர்தினி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் சேலம் பெண்கள் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம், திருமணத்திற்கு முன் வருங்கால துணையின் தகவல்களை நம்பிக்கையுடன் எடுத்துக் கொள்ளாமல், முறையாக விசாரித்து உறுதி செய்து கொள்ள வேண்டும் என்பதற்கான மிகப்பெரிய பாடமாக அமைந்துள்ளது.