திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நடந்த இளம் பெண்ணின் மர்ம மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பனியன் தொழில் அதிபர் அண்ணாதுரையின் மகள் ரிதன்யா (27), கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருப்பூர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் குடும்பத்தை சேர்ந்த கவின் குமாருடன் (28) திருமணம் செய்திருந்தார். ஆனால், திருமண வாழ்க்கை குறுகிய காலத்திலேயே சீர்குலைந்து, கணவர் வீட்டில் இருந்து வெளியேறிய ரிதன்யா தன் காரில் சாலையோரம் நின்று பூச்சி மருந்து உட்கொண்டு உயிரிழந்தார். காருக்குள் மயங்கி கிடந்த ரிதன்யாவை பொதுமக்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடன் அவிநாசி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. திருமணமான 78 நாட்களில் புதுப்பெண் உயிரிழந்ததால், விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
வரதட்சணை கேட்டு தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். திருமணத்திற்கு 100 சவரன் நகை, வால்வோ கார் மற்றும் கோடிக்கணக்கில் பணம் செலவு செய்தும் பெண்ணுக்கு அமைதி கிடைக்கவில்லை என உறவினர்கள் வலியுறுத்தினர். உயிரிழப்புக்கு முன் தந்தைக்கு வாட்ஸ்அப் ஆடியோ பதிவு செய்த ரிதன்யா, தன் கணவரும் அவரது பெற்றோரும் தான் இந்த முடிவுக்கு காரணம் என உருக்கமாக தெரிவித்திருந்தார். என்னை மன்னித்து விடுங்கள் அப்பா அம்மா எனக் கூறியிருந்தார். அந்த ஆடியோவை போலீசார் ஆதாரமாக கொண்டு கணவர் கவின் குமார், அவரது தாய் சித்ராதேவி மற்றும் தந்தை ஈஸ்வரமூர்த்தியை கைது செய்தனர். இச்சம்பவம் அவிநாசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி, பெண் பாதுகாப்பு மீதான கேள்விகளையும் எழுப்பி உள்ளது. விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.