தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெறுவதால் கும்பாபிஷேக ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. 12 ஆண்டுகளுக்கு பிறகு ஜூலை ஏழாம் தேதி சுப்பிரமணிய சுவாமி கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. அதற்கான யாகசாலை பூஜைகள் நாளை தொடங்க உள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாவது வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது. தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். 12 ஆண்டுகளுக்கு பிறகு திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேக நடத்த முடிவு செய்யப்பட்ட நிலையில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் பணிகள் சிறப்பாக முடிவடைந்துள்ளது.
ஜூலை 7ஆம் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் காலை 6:15 முதல் 6.50 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவை ஒட்டி ஜூலை இரண்டாம் தேதி யாகசாலை பூஜைகள் நடைபெற உள்ளதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. 12 யாகசாலை பூஜை நடைபெறுவதற்கு கோவிலின் மேற்கு கோபுரம் பகுதியில் 8000 சதுர அடியில் 76 வேள்வி குண்டலங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

40 நாட்களாக நடைபெற்று வந்த பணிகள் நேற்று முடிவடைந்தது. யாகசாலை பூஜைகள் நாளை தொடங்கவிருக்கும் நிலையில் இன்று கோவிலின் வளாகத்தில் வாஸ்து சாந்தி பூஜை நடைபெற்றது. வாஸ்து சாந்தி படம் வரையப்பட்டு பூ தூவி சிறப்பு வழிபாடு நடந்ததை தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு பின் யாக வேள்விகள் வளர்க்கப்பட்ட சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
விநாயகர் வழிபாடு, வேள்விச்சாலை, தூய்மை நிலவேள்வி, தூய மீட்பு சடங்கு, காப்பு வேள்வி, நில திருக்குட வழிபாடு மற்றும் தானிய வழிபாடு போன்ற சடங்குகள் நடைபெற்றதில் கோவில் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பதற்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட உள்ளது.