புதுச்சேரி சேதராப்பட்டு புதுகாலனி கண்ணப்பன் என்பவர் விறகு அடுப்பில் மீன் குழம்பு சமைத்து கொண்டிருந்தார். அதே சமயம் அருகே விளையாடிய அவரது குழந்தை, தவறி சட்டியில் விழுந்தது. அந்த கொந்தளிக்கும் சூடு குழந்தையின் சிறிய உடலை வெந்து சேதப்படுத்தியது.மருத்துவமனைக்கு கொண்டு சென்றாலும் குழந்தை உயிர் பிழைக்கவில்லை. இதேபோன்று கும்பகோணத்திலும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஐந்து தலைப்பு வாய்க்கால் பகுதியை சேர்ந்த முருகேசன் – அனுசியா தம்பதியர் தங்களின் இரு வயது மகன் ரிஷியை இழந்தனர். பானிபூரிக்கு குழம்பு தயார் செய்து வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தில், விளையாடியபடியே விழுந்த அந்த சிறுவன், அலறி துடித்தான். இதனை கண்ட பெற்றோர் பதறிப்போய் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர், ஆனால் சிகிச்சை பலனின்றி தாயின் கண்முன்னே குழந்தையின் உயிர் பரிபோனது.
மற்றொரு சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் சமீபத்தில் நடந்தது. தெருவில் பானிபூரி விற்று வாழ்க்கை நடத்தும் குடும்பம். ஒருநாள் வீட்டில், பட்டாணி குழம்பு கொதிக்க வைத்திருந்தனர், அதில் அவர்களின் 18 மாத குழந்தை பிரியா விழுந்துவிட்டார். உடல் முழுக்க தீக்காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இறுதியில் சிகிச்சை பலிக்காமல் அந்தக் குழந்தையும் உயிரிழந்துள்ளது. அதைவிட வேதனை என்னவென்றால், இதே குடும்பத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்பு அதே மாதிரி, பிரியாவின் அக்கா பருப்பு சட்டியில் விழுந்து இறந்திருந்தாள். ஒரே வீட்டில் இப்படி இரண்டு குழந்தைகள் இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியாக நிகழ்ந்துள்ள இச்சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை சமூகத்தில் உருவாக்கியுள்ளது.