சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் நடந்த இந்த சம்பவம் அந்தப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நுங்கம்பாக்கம் ஏரிக்கரை தெருவில் வசிக்கும் ஆயுதப்படை உதவி காவல் ஆய்வாளர் ராஜி மீது, 8 வயது சிறுமிக்கு மயக்க ஊசி செலுத்தி பாலியல் துன்புறுத்தல் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த சிறுமிக்கு தாய் இல்லை. பாட்டி மற்றும் தந்தையின் பராமரிப்பில் வாழ்ந்து வருகிறாள். சம்பவத்தன்று அந்த சிறுமி வீட்டின் அருகே தனது தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென காணாமல் போனார்.
அதன் பிறகு சிறுமியின் தந்தை மற்றும் உறவினர்கள் முழு பகுதியையும் சுற்றி தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. பின்னர் தோழியிடம் கேட்டதிலிருந்தே உதவி ஆய்வாளர் ராஜியின் வீட்டில் குழந்தை இருக்கிறாள் என தகவல் கிடைத்தது. அங்குச் சென்ற பெற்றோர், வீட்டினுள் மயக்க நிலையில் இருந்த சிறுமியை கண்டுபிடித்தனர். உடனே குழந்தையை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுமி சிகிச்சை பெற்றபின், உதவி ஆய்வாளர் தவறான வகையில் நடந்துகொண்டதாக கூறி பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து, பெற்றோர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க முயன்ற போது, போலீசார் தொடக்கத்தில் அந்த புகாரை பதிவு செய்ய மறுத்ததாக தெரிகிறது. இதனால், உறவினர்கள் காவல் நிலையம் முன்பு இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு நியாயம் கேட்டனர். பின்னர் போலீசார் சமாதானம் கூறி அவர்களை அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக ஆயுதப்படை உதவி ஆய்வாளர் ராஜியை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர், தனது மீது வந்த குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்து, “சிறுமியின் பெற்றோர் தொடர்ச்சியாக குழந்தையை துன்புறுத்தி வருகின்றனர்.
அதை நான் குழந்தைகள் நல அமைப்பிடம் தெரிவிப்பதாக கூறியதன் பின்னர், என்னை பழிவாங்க இப்படி பொய்யான குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது,” என தெரிவித்தார். தற்போது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், உண்மை நிலை என்ன என்பது குறித்து போலீசார் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர். இதே நேரத்தில் அந்த சிறுமிக்கு தேவையான மருத்துவ சிகிச்சையும், உளவியல் ஆலோசனையும் வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவம் காவல்துறையினரிடையே பெரும் அதிர்ச்சி மற்றும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து மேலும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.