திருப்பதி அருகே காரில் ஏசி இயக்கி தூங்கியதில் இரண்டு சகோதரர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் திருப்பதி மாவட்டத்தை சேர்ந்த திலீப் (25) மற்றும் அவரது தம்பி வினய் (20) என இருவரும் மது அருந்தும் பழக்கத்தில் இருந்தவர்கள். கடந்த இரவு இருவரும் காரில் வெளியே சென்று, திருச்சானூர் அருகே வாகனத்தை நிறுத்தி, ஏசி இயக்கி காரில் உட்கார்ந்தபடியே மது அருந்தினர். பிறகு அதே நிலையில் காரில் தூங்கிவிட்டனர். மற்றவர்களுக்கு காரில் தாங்கள் இருப்பது தெரியாமல் இருக்க, அவர்கள் காரை துணிகளால் மூடி மறைத்திருந்தனர். ஆனால் காரின் ஏசி முறையாக வேலை செய்யாத காரணத்தால் கார்பன் மோனாக்சைடு போன்ற விஷவாயுக்கள் காருக்குள் தேங்கி, இருவருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதனால் அவர்கள் காருக்குள்ளேயே உயிரிழந்தனர் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
காரில் ஏசி இயக்கி நிறுத்தி வைத்து தூங்குவது ஆபத்தானது என வாகன நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். காரின் இன்ஜின் ஓடிக்கொண்டிருந்தாலும், காற்றோட்டம் இல்லாமல் இருக்கும்போது விஷவாயுக்கள் காருக்குள் தங்குவதால் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. இந்தச் சம்பவம் மீதான விசாரணையை போலீசார் மேற்கொண்டுள்ளனர். இதுபோன்ற அவசர நிலைகளை தவிர்க்க, காரில் தூங்கும் போது காரின் ஜன்னல் ஓரளவு திறந்திருக்க வேண்டும் என்றும், ரீசர்குலேட் மோடில் ஏசி வைப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





