பாட்னா நகரில் பார்வையற்ற மாணவ, மாணவிகளுக்காக செயல்பட்டு வரும் பள்ளி ஒன்றில் நடந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 2018ஆம் ஆண்டு அந்த பள்ளியில் சேர்க்கப்பட்ட 12 வயது சிறுமி ஒருவர், கடந்த மே மாத கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 25ஆம் தேதி பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால் மாணவி பள்ளி செல்ல மறுத்துள்ளார். இதனால் கவலையடைந்த பெற்றோர், குழந்தையிடம் காரணம் கேட்டபோது, அவர் ஆரம்பத்தில் கூற மறுத்துள்ளார். ஆனால், பின்னர் சிறுமியின் சகோதரி ஒரு அதிர்ச்சியூட்டும் தகவலைத் தெரிவித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளியின் அலுவலராக பணியாற்றி வந்த அஜித் குமார் என்ற ஊழியர், அந்த பார்வையற்ற சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார் என்பதை அந்த சிறுமியின் சகோதரி கூறியுள்ளார். இந்த விவரத்தை தெரிந்து கொண்ட பெற்றோர் உடனடியாக ஆகம்குவான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சிறுமிக்கு பார்வை இல்லாத காரணத்தால் அவர், சம்பந்தப்பட்ட நபரை முகத்தால் அடையாளம் காண முடியாது என்றாலும், அவருடைய குரலை கேட்டு அடையாளம் காட்ட முடியும் என கூறியுள்ளார். மேலும், அஜித் அந்த சிறுமியை பலாத்காரம் செய்த பிறகு, இதைப் பற்றி வெளியே சொன்னால் பள்ளியில் இருந்து நீக்கி விடுவேன் என்றும், அடித்து தாக்குவேன் என்றும் மிரட்டியதாக சிறுமி தெரிவித்துள்ளார்.
இந்த காரணத்தினால் வெகு நாளாக சிறுமி பயத்தில் அதை யாரிடமும் தெரிவிக்காமல் தனக்குள்ளேயே சுமந்து வந்துள்ளார். இந்நிலையில் மற்ற மாணவிகளும் அஜித்தை கண்டு பயம் கொள்வதை போலத் தெரிகிறது. போலீசார் பள்ளியில் விசாரணை நடத்தியபோது, மாணவிகள் “அஜித் சார் சிறைக்கு போவாரா?” என கேட்டதன் மூலம், அஜித்தை கண்டால் அவர்களுக்கும் பயம் இருப்பதை போலீசார் கண்டுபிடித்து உள்ளனர். தற்போது, இது பற்றி போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.


