திருமண வாழ்வு என்ற பெயரில் பெண்களை பணக் கோரிக்கைகளால் பாதிக்கும் வரதட்சணை கொடுமைகள் இன்றும் நீங்காமல் தொடர்வது சமூகத்திற்கு பெரும் கருப்பு களங்கமாக இருக்கிறது என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடுமையாக கண்டித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே மற்றும் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே நடந்த இரு பெண்களின் மரண சம்பவங்களை எடுத்துக்காட்டியுள்ள அவர், ‘‘பெண்களின் வாழ்க்கை பணத் தேவைகளுக்காக வீணாக்கப்படுவது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. பெற்றோர் தங்கள் மகள்களை கல்வி கற்பித்து உயர்வாக வளர்த்து, திருமணத்திற்கு பிறகு பணக்கோரிக்கைகளால் அவர்களை இழந்து வாட வேண்டிய நிலை ஏற்படக்கூடாது,’’ என்றார்.வரதட்சணை தொடர்பான வழக்குகள் நீண்ட காலம் நீடிப்பதால் குற்றவாளிகள் தண்டனை பெறாமல் தப்பிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதாகவும், இதற்கு கடுமையான தீர்வாக வரதட்சணை கொடுமை செய்து உயிரிழப்புக்கு காரணமானவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், பெண்களை வரதட்சணை கொடுமையிலிருந்து பாதுகாக்க அரசு, சமூக அமைப்புகள், பள்ளிகள் மற்றும் ஊடகங்கள் ஒருங்கிணைந்து விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் என்றும், குழந்தைகள் பிறந்த நாளிலிருந்தே அவர்களுக்கு பெண்களை மதிக்க வேண்டும் என்ற கருத்தை மனதில் பதிய வைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.‘‘ஒரு பெண்ணின் வாழ்க்கை பணத்திற்கான பரிமாற்றப் பொருளாக கருதப்படும் நாள் இனி எதுவும் வரக்கூடாது. பெண்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான உரிமையை அரசு உறுதி செய்ய வேண்டும்,’’ என பிரேமலதா விஜயகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.





