வாஷிங்டன்: அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 173 பேர் காணாமல் போனதை தொடர்ந்து தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் கடலோர மாகாணமாக இருக்கும் டெக்ஸாஸில் வனப்பகுதியை ஒட்டி உள்ள கெர் கவுண்டி சுற்றிலும் சிற்றோடைகள், ஆறுகள் பாய்கின்றன.
கடந்த நான்காம் தேதி நள்ளிரவில் கொட்டித் தீர்த்த கனமழையால் குவாடலூப் ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்தது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கொட்டித் தீர்த்த கனமழையால் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அதிகப்படியான நீர் ஊருக்குள் புகுந்தது.
இதில் வாகனங்கள் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டது. வெள்ளப்பெருக்கில் இருந்து தப்பிக்க முயற்சி செய்தபோது வீட்டின் கூரை மேல் ஏறி சிலர் தப்பித்தனர் . திடீர் வெள்ளப்பெருக்கில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இருபதுக்கும் மேற்பட்ட பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்கள் மூலமாக பேரிடர் மீட்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர் .
குறிப்பாக கடலோர காவல் படையைச் சேர்ந்த ஸ்காட் ரஸ்கின் என்பவர் சிங்கிள் மேன் ஆர்மி ஆக செயல்பட்டு 165 பேரை காப்பாற்றினார். திடீர் வெள்ளத்தால் இதுவரை 120 பேர் பலியாகி உள்ளனர். காணாமல் போன 173 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயருமா? என்ற அச்சத்தில் உள்ளனர் மீட்பு துறையினர்.
வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நாட்டின் பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று காண்பதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (11/07/2025) வெள்ளிக்கிழமை நாளை சென்று பார்வையிட உள்ளார்.