37 வது சதத்தை பதிவு செய்த ரூட்!! ட்ராவிட் ஸ்மித்தை பின்னுக்கு தள்ளி அபார சாதனை!!

Root scores his 37th century

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஜோ ரூட் சதம் அடித்து தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த சதம் அவரது டெஸ்ட் வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக அமைந்ததுடன், பல புதிய சாதனைகளையும் படைக்க வழிவகுத்தது.

இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்த பிறகு, இங்கிலாந்து அணி நிதானமாக ஆட்டத்தைத் தொடங்கியது. முதல் சில விக்கெட்டுகள் சீக்கிரம் விழுந்த போதிலும், ஜோ ரூட் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூட்டணி அணியை சரிவிலிருந்து மீட்டது.

கிரிக்கெட்டின் மெக்கா என்று அழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் அதிக ரன்கள் (2526) எடுத்த வீரர் என்ற பெருமையையும் ரூட் பெற்றார். இதற்கு முன் இங்கிலாந்து ஜாம்பவான் கிரஹாம் கூச் 2513 ரன்கள் எடுத்திருந்தார். லார்ட்ஸ் மைதானத்தில் இது ரூட்டின் 8வது சதம் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 99 ரன்களுடனும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 39 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்திய அணி சார்பில் நிதீஷ் ரெட்டி 2 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.  ரூட்டின் இந்த சதம், டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவிற்கு எதிராக அவர் அடிக்கும் 10வது சதமாகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் ராகுல் டிராவிட், ஸ்டீவ் ஸ்மித் (36 சதங்கள்) ஆகியோரின் சாதனையை முறியடித்து, தனது 37வது சதத்தை பதிவு செய்தார் ரூட்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram