சென்னை, ஜூலை 11, 2025: நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில், குறிப்பாக மலைப்பகுதிகளில், வருகிற ஜூலை 15 முதல் 17 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக இந்த இரண்டு மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை (Yellow Alert) விடுக்கப்பட்டுள்ளது.
கனமழைக்கான வாய்ப்பு: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூலை 15, 16, மற்றும் 17 ஆகிய தேதிகளில் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் 7 முதல் 11 சென்டிமீட்டர் வரை கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று மற்றும் நாளை (ஜூலை 11 & 12): தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூலை 13 முதல் 14 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை (ஜூலை 12): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
*நாளை முதல் ஜூலை 14 வரை: குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.