கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தாசனபுரம் கிராமத்தில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாசனபுரத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி ஈஸ்வர் மற்றும் மம்தா தம்பதிக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். அவர்களின் இரண்டாவது மகன் ராம்சரண் (8), அங்குள்ள அரசு பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகின்றான். நேற்று முன்தினம், பள்ளி முடிந்து நண்பனுடன் பக்கத்து வீட்டுக்கு அருகே விளையாடச் சென்ற ராம்சரண், எதிர்பாராத விதமாக கோழிப் பண்ணையில் இருந்து வெளியே வந்த தெருநாயின் தாக்குதலுக்கு ஆளானான். நாய் சிறுவனை தலை, முதுகு, காது, மூக்கு, கன்னம் என பல்வேறு இடங்களில் கடித்துக் கிழித்தது. ரத்தம் ஆறாக வெளியேற சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அலறிக் கொண்டிருந்தான். அருகிலிருந்த மக்கள் விரைந்து ஓடி வந்து சிறுவனை அந்த நாயிடமிருந்து காப்பாற்றினர்.
அதன்பின் கூலி வேலைக்கு சென்றிருந்த பெற்றோர் விரைந்து வீட்டுக்கு வந்து சிறுவனை ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, சிறுவனுக்கு 40 இடங்களில் தையல் போடப்பட்டு சிகிச்சை நடைபெற்று வருகிறது. தற்போது அவன் நிலைமை கவலைக்கிடமானதாக இருப்பதால், பெற்றோர் மட்டுமன்றி பொதுமக்களும் பெரும் அச்சத்தில் உள்ளனர். இதேபோன்று ஓசூர் தேர்பேட்டை பகுதியில் தனியார் வங்கியில் பணிபுரியும் முத்துலட்சுமி (25) என்ற பெண், டூவீலரில் சென்றபோது தெருநாய் துரத்தி கடித்துள்ளது. இதில் அவரது காலில் ஆழமான காயங்கள் ஏற்பட்டதால் அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், ஓசூர் தின்னூர் பகுதியைச் சேர்ந்த பட்டதாரி வாலிபர் எட்வின் பிரியன் நாய் கடிக்கபட்டார். உரிய சிகிச்சை பெற முடியாத காரணத்தால் இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவர் திடீரென உயிரிழந்தார். இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால் ஓசூர் மற்றும் சுற்றுப்புற மக்களிடம் பெரும் பதற்றம் நிலவுகிறது. தெருநாய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.