அதிமுக மீண்டும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்ற நோக்கில், முன்னாள் முதலமைச்சரும் அதிமுக முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் (ஓ.பி.எஸ்) இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொண்டால் எந்த நிபந்தனையும் இல்லாமல் தானாகவே அதிமுகவில் இணைவேன் என அவர் கூறியுள்ளார். பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “அதிமுகவின் அனைத்து தொண்டர்களும் மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். எடப்பாடி பழனிசாமி ஒத்துழைத்தால், பதவி அல்லது நிபந்தனை எதுவும் தேவையில்லை. நான் உடனே அதிமுகவில் இணையத் தயாராக இருக்கிறேன்” என்று உறுதியாக தெரிவித்தார். மேலும், “எடப்பாடி பழனிசாமியை விமர்சிக்க வேண்டாம். அதைத் தவிர்த்து ஒருவர் மீது ஒருவர் விமர்சனம் செய்யாமல் ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும். என்னுடன் இருப்பவர்களுக்கு தகுதி பார்வையில் பதவிகள் கிடைக்க நான் பொறுப்பு ஏற்பேன்” என்றார்.
வரும் செப்டம்பர் 4ஆம் தேதி மதுரையில் ஓ.பி.எஸ் தலைமையில் பெரிய மாநாடு நடைபெறவுள்ளது. அந்த மாநாட்டுக்கு சசிகலா மற்றும் டிடிவி தினகரனுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என ஓ.பன்னீர்செல்வம் கூறினார். அந்த மாநாடு வரலாற்றில் முக்கியமானதாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், “ஜெயலலிதாவின் ஆசீர்வாதத்துடன் அதிமுக மீண்டும் ஆட்சியில் அமரும் வரை எனது சட்டப் போராட்டம் தொடரும். இதுவரை எனக்கு துணையாக இருந்த அனைவருக்கும் நன்றி. நம்முடைய நோக்கம் விரைவில் நிறைவேறும்” என்றார் ஓ.பி.எஸ். மாநாட்டில் அதிமுக எதிர்கால திட்டங்கள் குறித்து முழுமையாக அறிவிக்கப்பட இருப்பதாகவும், அதுவரை ஆதரவாளர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். ஓ.பி.எஸ்-ன் இந்த அறிவிப்பால் அதிமுகவில் புதிய அரசியல் சூழல் உருவாகுமா என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.