மக்கள் அரசுத் துறைகளுக்கு அலைய வேண்டிய நிலை இனி இல்லை. தமிழக அரசு மக்களை நேரடியாக சந்திக்க ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற சிறப்பு முகாம்களை இன்று (ஜூலை 15) முதல் நவம்பர் 14 வரை மாநிலம் முழுவதும் நடத்துகிறது. இந்த முகாம்களின் முக்கிய நோக்கம், மக்களின் குறைகளை நேரில் கேட்டு உடனடி தீர்வு காண்பது. இதில் ஊரக பகுதிகளில் 46 விதமான சேவைகள், நகர்ப்புறங்களில் 43 விதமான சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்படும். மகளிர் உரிமைத்தொகை திட்டத்திலிருந்து தவறுபட்ட பெண்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம். அதேபோல் பிற நலத்திட்டங்களுக்கும் மக்கள் ஒரே இடத்தில் விண்ணப்பிக்க முடியும். மேலும் மருத்துவ முகாம்களும் நடத்தப்பட உள்ளன. மொத்தம் நான்கு கட்டங்களாக 10,000 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் அனைத்து துறை அதிகாரிகளும் நேரில் பங்கேற்க இருப்பதால், மக்கள் அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமே இருக்காது. இந்த முகாம்களில் பெறப்படும் மனுக்கள், கோரிக்கைகள், ஆவணங்களுக்கான நடவடிக்கைகள் 45 நாட்களுக்குள் முடிக்கப்படும் என தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. மாநில மக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தங்களின் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு பெறலாம் என்று அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
