மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்கள், ராஜ்யசபா உறுப்பினராக மாநிலங்களவை எம்பியாக பதவியேற்க இருக்கிறார். அவர் ஜூலை 25ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் செய்து கொள்கிறார் என்று மநீம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை 24 அன்று முடிவடைகிறது. இதையடுத்து, இந்த இடங்களுக்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் புதிய உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திமுக சார்பில் பி. வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம், மநீம் சார்பில் கமல்ஹாசன் மற்றும் அதிமுக சார்பில் தனபால், ஐ.எஸ். இன்பதுரை ஆகியோர் தேர்வு பெற்றுள்ளனர். அவர்களும் அதே நாளில் பதவி ஏற்க உள்ளனர்.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் 12 வரை நடைபெற உள்ளது. இதற்குள் புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்கின்றனர். அதன்படி கமல்ஹாசன் ஜூலை 25 அன்று பதவியேற்கிறார். சினிமாவில் தன் தனித்துவத்தால் ரசிகர்களை ஈர்த்த கமல்ஹாசன், இப்போது நாடாளுமன்ற அரங்கத்தில் தனது முதல் உரையை எப்போது வழங்கப்போகிறார் என்பதே ரசிகர்களுக்கும் அரசியல் வட்டாரத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. திமுக கூட்டணியின் ஆதரவுடன் மாநிலங்களவைக்குள் காலடி வைக்கும் கமல்ஹாசன், அரசியலில் புதிய கோணத்தை உருவாக்குவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.