சென்னை தாம்பரத்தில் ஏற்பட்ட ஒரு துயர சம்பவம் தற்போது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. தாம்பரம் சேலையூர் அருகேயுள்ள வெங்கம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கட்டிட நிறுவனத்தில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த நான்கு பேர் தங்கி கட்டிட வேலை செய்து வந்தனர். சில நாட்களுக்கு முன்பு இந்த தொழிலாளர்கள் அருகிலுள்ள கடையிலிருந்து கோழிக்கறி வாங்கி வந்து அதை சமைத்து சாப்பிட்டனர். அந்த நள்ளிரவில் அவர்கள் தூங்கச் சென்ற பிறகு அவர்களில் ஒருவருக்கு உடல்நிலை மோசமாகியது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும், வழியிலேயே ஐதர்சக் என்ற தொழிலாளர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற தொழிலாளிகள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோழிக்கறி என்பது சரியாக சமைக்கப்படவில்லை என்றால், அதில் உள்ள சால்மோனெல்லா மற்றும் காம்பிலோபாக்டர் போன்ற பாக்டீரியாக்கள் காரணமாக விஷ உணவாக மாறும்.
இது உணவுத் தொற்றுகளை ஏற்படுத்தும். குறிப்பாக கெட்டுப்போன சிக்கன் என்றால், அதை சமைத்த பிறகும் அந்த பாக்டீரியாக்கள் முற்றிலும் அழிக்கப்பட வாய்ப்பில்லை. மேலும், சிக்கனை அதிக நேரம் வெளியில் வைத்திருக்கும்போதும், மீண்டும் சுடும்போதும் கூட பாக்டீரியாக்கள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
தினமும் சிக்கன் கடைகளில் காலை முதல் மாலை வரை தொங்கவிடப்படும் சிக்கனை, பாதுகாப்பின்றி விற்கும் நிலைமை சில இடங்களில் காணப்படுகிறது. இந்த நிலையில், இரவில் அந்த சிக்கனை வாங்கிச் சமைப்பது, உடலுக்கு கேடு ஏற்படுத்தும். இந்த சம்பவம் பற்றிய விசாரணையை பீர்க்கன்காரணை போலீசார் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். உண்மையான மரணம் ஏற்பட்டதற்கான காரணம் எது என்ற கேள்விக்கு விரைவில் தெளிவான பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதுபோன்ற உணவுப் பாதுகாப்பு விழிப்புணர்வுகள் மக்கள் மத்தியில் ஏற்படவேண்டியது அவசியமாகிறது.