சென்னை: சளியால் அவதிப்பட்ட எட்டு மாத ஆண் குழந்தையின் மூக்கில் தைலம் மற்றும் கற்பூரத்தை தேய்த்ததால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சென்னை கொடுங்கையூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொடுங்கையூர், காமராஜர் சாலையைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சரத்குமார் – புவனேஸ்வரி தம்பதியரின் எட்டு மாத மகன் ரோஹித்துக்கு கடந்த சில நாட்களாக சளித்தொல்லை இருந்துள்ளது. நேற்று இரவு குழந்தையின் சளியைக் குறைக்க, பெற்றோர் தைலம் மற்றும் கற்பூரத்தை மிகக் குறைந்த அளவில் குழந்தையின் மூக்கில் தேய்த்துள்ளனர்.
சிறிது நேரத்தில் குழந்தை மூச்சுவிட முடியாமல் திணறி அழுதுள்ளது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு பதறிப்போன பெற்றோர், உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், மூச்சுத் திணறல் காரணமாக குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்த செய்தி பெற்றோரையும், உறவினர்களையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சம்பவம் குறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சளிக்கு பயன்படுத்தப்படும் சில தைலங்கள் மற்றும் கற்பூரம் போன்றவை குழந்தைகளுக்கு பயன்படுத்தும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் இதுபோன்ற பொருட்களைப் பயன்படுத்துவது ஆபத்தில் முடியும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது