திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே கிணற்றின் சுவர் மீது அமர்ந்து சிக்கன் ரைஸ் சாப்பிட்ட ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த மண்டலநத்தம் ஊராட்சிக்குட்பட்ட நரசிம்மபுரம் காலனியைச் சேர்ந்தவர் மாதன் (50). இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மாதன், கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் (ஜூலை 14) இரவு, மாதன் வழக்கம் போல் வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பியுள்ளார். அப்போது, அவர் தான் வாங்கி வந்த சிக்கன் ரைஸை, வீட்டின் அருகே இருந்த ஒரு விவசாயக் கிணற்றின் சுற்றுச்சுவர் மீது அமர்ந்து சாப்பிட்டுள்ளார். இரவு நேரம் என்பதாலும், போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
சிக்கன் ரைஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அவர் கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, மாதன் கிணற்றில் விழுந்தது தெரியவந்தது. உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பத்தூர் தீயணைப்புத் துறையினர், கிணற்றுக்குள் இறங்கி மாதனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மாதன் சடலமாக மீட்கப்பட்டார். மாதனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து கந்திலி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றின் சுவர் மீது அமர்ந்து உணவு சாப்பிட்டபோது தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் இரவு நேரங்களில் கவனக்குறைவாக செயல்பட வேண்டாம் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.