சேலம் நான்கு ரோடு அண்ணா பூங்கா அருகே உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 16 அடி உயர வெண்கல சிலை மீது கருப்பு பெயிண்ட் ஊற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சிலையை 2023ஆம் ஆண்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மக்கள் அதிகம் திரளும் அந்தப் பகுதியில் நேற்று அதிகாலை, சிலையின் மேல் கருப்பு பெயிண்ட் ஊற்றப்பட்டிருந்தது. இதைப் பார்த்த பொதுமக்கள் உடனே திமுக நிர்வாகிகளுக்கு தகவல் அளித்தனர். திமுகவினர் அங்கு திரண்டதால் பரபரப்பு சூழல் உருவானது. சிலையை அவமதித்தவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். உதவி காவல் கண்காணிப்பாளர் அஸ்வினி, அஸ்தம்பட்டி போலீஸ் நிலைய ஆய்வாளர் தவமணி உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் குழுவும் ஆய்வு செய்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து, தனிப்படை அமைத்தனர்.
அருகிலிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆராய்ந்த போது, ஒரு காரில் முதியவர் ஒருவர் பெயிண்ட் டப்பாவுடன் செல்வது பதிவாகி இருந்தது. பொதுமக்கள் உதவியுடன் போலீசார் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் விஸ்வநாதன் (வயது 77) என்பவர். இவர் காது, மூக்கு, தொண்டை மருத்துவராக சேலம் ஐந்து ரோடு பகுதியில் வசித்து வருகிறார். தனிப்பட்ட முறையில் அவர் காரில் வந்து, 5 லிட்டர் கருப்பு பெயிண்ட் கொண்டு சென்று சிலை மீது ஊற்றி விட்டுச் சென்றுள்ளார். விசாரணையில் அவர் தெரிவித்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “நாட்டில் ஏழைகள் பசியில் கிடக்கின்றனர். மக்கள் மதுவுக்கு அடிமையாகின்றனர். இதுபோன்ற சூழலில் முன்னாள் முதலமைச்சருக்கு இவ்வளவு பெரிய சிலை தேவையா என்று எண்ணி மன அழுத்தம் ஏற்பட்டது. அதனால் சிலை மீது கருப்பு பெயிண்ட் ஊற்றினேன்” என்று அவர் கூறியுள்ளார். திமுகவினர் இதை கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். சட்டத்தின் பார்வையில் இவர் செய்தது குற்றம். ஆனால் அவரது வாக்குமூலம், சமூகத்தில் சிலைகள் மற்றும் முக்கிய தலைவர்களின் நினைவுச்சின்னங்கள் குறித்து புதிய விவாதங்களை எழுப்பியுள்ளது.