தமிழகத்தில் தெரு நாய்களால் ஏற்படும் கடி மற்றும் நோய் பரவல் சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில், அவற்றால் உயிருக்கு நேரும் ஆபத்தை தடுக்கும் வகையில், நோயால் பாதிக்கப்பட்ட மற்றும் நோய் பரப்பக்கூடிய நாய்களை “கருணைக் கொலை” செய்ய அரசு அனுமதி வழங்க வேண்டும் என ‘எம்பவர் இந்தியா’ அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த அமைப்பின் நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் கௌரவ செயலாளர் ஆ. சங்கர், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள மனுவில், தெளிவான புள்ளிவிவரங்கள் மூலம் தெரு நாய்கள் பிரச்சினையின் தீவிரத்தன்மையை எடுத்துரைத்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
தமிழகத்தின் பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி இதழ்களில் வெளியான தகவல்களின் அடிப்படையில், 2022ஆம் ஆண்டு 3,65,318 நாய்க்கடிகள், 2023ஆம் ஆண்டு 4,40,921 நாய்க்கடிகள் மற்றும் 2025ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் 1,24,000 நாய்க்கடிகள் நிகழ்ந்துள்ளன.
இதன் காரணமாக, 2017ல் 16 பேர் உயிரிழந்தனர் என்றார், 2024ல் அந்த எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. இதில் 4 வயது குழந்தையும் உயிரிழந்துள்ளது என்பது மிகவும் வேதனைக்குரியது. இத்தகைய நிகழ்வுகள் மக்கள் மனதில் அதிக அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, தெரு நாய்களால் ஏற்படும் ரேபிஸ் (Rabies) தொற்றும், உயிரிழப்புகளும் விரைவாக அதிகரித்து வரும் சூழ்நிலையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு, உரிய கால்நடை மருத்துவர் சான்றுடன், நோயால் பாதிக்கப்பட்ட மற்றும் தொற்றை பரப்பக்கூடிய நாய்களை கருணைக் கொலை செய்ய அதிகாரம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இதற்கு போர்க்கால அடிப்படையில் உடனடி தீர்வுகள் தேவை எனவும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது இந்த கோரிக்கை சமூகத்தில் பல்வேறு நிலைகளில் விவாதத்துக்கு இடமளிக்கிறது. தெரு நாய்களின் பாதுகாப்பும், மக்களின் பாதுகாப்பும் இடையே சமநிலை ஏற்படுத்தும் வகையில் அரசு எவ்வகையான தீர்வை எடுக்கப்போகிறது என்பது ஆர்வமூட்டுகிறது.