மக்கள் வீட்டுக்குள்ளே வரை நுழைந்து, ஆதார் எண்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை சேகரித்து வருவதாகத் திமுகவின் உறுப்பினர் சேர்க்கை இயக்கமான “ஓரணியில் தமிழ்நாடு” என்ற திட்டத்திற்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அதிரடி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், திமுக நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று மக்களுக்கு விளக்கமின்றி ஆவணங்களை கேட்டு வற்புறுத்துவதோடு, சில இடங்களில் மிரட்டல் விடுத்துவிட்டு போனதாகவும், அவர்களின் தனியுரிமை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மனுவில், ஆதார், வாக்காளர் அட்டை, வங்கி கணக்கு விவரங்கள் போன்றவை அனுமதியின்றி சேகரிக்கப்பட்டுள்ளதையும், அரசுத்திட்ட உதவிகள் நிறுத்தப்படுவதாக மிரட்டினார்கள் என்றும், இதன் மூலம் மக்கள் விருப்பமின்றி திமுகவில் சேர்க்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
தனிப்பட்ட விவரங்களை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்துவதைத் தடுக்க, இதுவரை சேகரிக்கப்பட்ட அனைத்து தகவல்களையும் உடனடியாக அழிக்க வேண்டும். மேலும், மத்திய அரசு மற்றும் ஆதார் அமைப்புகள் விசாரணை நடத்தி, திமுக பொதுச் செயலாளருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. “ஓரணியில் தமிழ்நாடு” திட்டம் கடந்த ஜூன் மாதம் திமுக பொதுக்குழுவில் தொடங்கப்பட்டு, ஜூலை 3 ஆம் தேதி முதல் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியாக தொடங்கியது. அதன்பின்னர் மாநிலம் முழுவதும் திமுக நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று உறுப்பினர் சேர்க்கையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த மனு விரைவில் நீதிமன்ற விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.