திருவனந்தபுரத்தில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. காதலிப்பது போல் நடித்து மாணவிகள் மற்றும் இளம்பெண்களை ஏமாற்றி, அவர்களைக் கட்டாயமாக விபசாரத்தில் ஈடுபட வைத்த ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் பெயல் அக்பர் அலி. இவர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளை காதலிப்பது போல் நடித்து அவர்களை ஓட்டல்களுக்கு அழைத்துச் சென்று, ஜூசில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பலாத்காரம் செய்து வந்துள்ளார். பலாத்காரம் செய்த பிறகு, அவர்களை கட்டாயப்படுத்தி விபசார விடுதியில் பயன்படுத்தி வந்துள்ளார் அக்பர் அலி. கேரள மாநிலம் கொச்சி எடப்பள்ளியில் உள்ள வீட்டில் விபசாரம் நடைபெறுகிறது என்ற தகவலின் பேரில் எளமக்கரை போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அக்பர் அலி மட்டும் அந்த வீட்டில் இருந்தார். தொடக்கத்தில் போலீசார் தகவல் தவறாக இருக்கலாம் என நினைத்தனர். ஆனால், அவரிடம் நடந்திய விசாரணையில் பல உண்மைகள் தெரிய வந்தன.
அக்பர் அலி, எர்ணாகுளம் சந்திப்பு ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு கட்டிடத்தில் விபச்சார விடுதி நடத்தி வருவதாகவும், அங்கு மாணவிகள் மற்றும் இளம்பெண்கள் பலர் கட்டாயமாக இழுத்துவரப்பட்டு உள்ளனர் என கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் போலீசார் அந்த இடத்தில் சோதனை நடத்தினர். அதில் கேரளா மற்றும் வடமாநிலங்களைச் சேர்ந்த 6 இளம்பெண்கள் உள்ளிட்ட 10 பேர் மீட்கப்பட்டனர். அந்த இளம்பெண்கள் அனைவரும் அக்பர் அலியின் காதல் வலையில் சிக்கி பலாத்காரம் செய்யப்பட்ட பின்னர் விபசாரத்திற்கு தள்ளப்பட்டவர்கள் என்பது தெரியவந்தது. இவரது விடுதியில் பல முக்கிய பிரமுகர்களும் சென்றுள்ளதை போலீசார் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர். தற்போது அக்பர் அலியின் மீது போக்சோ சட்டம் உட்பட பல்வேறு கடும் சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடைபெற்று வருகிறது.